பல வருசமாக தேடினாலும் கிடைக்காத ஒரு தேவதையாகவே பட்டாள் சங்கருக்கு, சங்கரின் காதலி ஜெகதீஸ்வரி. சின்ன பசங்க புத்தகத்துக்குள்ளே வச்சு 'அடை காக்கிற' மயிலிறகு மாதிரி அந்த காதலை மனசின் முக்கியமான மூலையில் அவனது காதலியையும் காதலையும் பத்திரமாக 'அடை காத்து' வச்சிருந்தான்.
அவனது காதல் ஆரோக்கியமாகவும் சந்தோசமாகவும் இருந்துச்சே தவிர அவங்க ஆரோக்கியமா இல்லை. பசியும் பட்டினியுமா பரம சௌகரியத்தோட இருந்தாங்க ரெண்டு பேருமே. ரோஜா கூடவே வளர்ந்துகிட்டு வருகிற முள் மாதிரி, அவங்க காதல் கூடவே கஷ்டங்களும் வளர்ந்து கிட்டே இருந்தது.
அப்போ சங்கரே சோத்துக்கு 'சிங்கி' அடிக்கிற நேரம் .....
கல்யாணம் செய்து கிட்டா பொண்டாட்டிக்கு வேற எப்படி சோறு போடுறது? ஒரே குழப்பமாக இருந்தது சங்கருக்கு . அவனுக்கோ அல்லது அவனது தேவதை ஜெகதீஸ்வரிக்கோ அப்போது கல்யாணம் செய்து கொள்ளும் வயசு இல்லை தான். ஆனால் சங்கருக்கு எது தான் வயசுக்கு பொருத்தமான விஷயம் நடந்தது. சங்கர் எதிர்காலத்தை நினைத்து ரெம்பவே குழம்பினான்.
கடவுள் வயிறை கொடுத்ததோட விடல்லையே பசியையும் சேர்த்ததில்ல கொடுத்திருக்கார். இதயத்தை கொடுத்ததோட விடல்லையே...கூடவே வருத்தைதையும் அல்லவா கொடுத்து விடுகிறான்.
பணக்காரன் காதலிச்சா செத்துப்போனவளுக்கு கூட தாஜ்மஹால் கட்டுவான்.
ஆனா, பஞ்ச பரதேசி காதலிச்சா உசிரோட இருக்கிற காதலிக்கு கட்டுறதுக்கு தாலி கூட வாங்க முடியாதே...!
அதற்காக ஏழையோட காதல் எந்த விதத்திலும் குறைந்து விடுமா....!
சங்கர் அவன் காதலியை அழைத்து கொண்டு கடற்கரை மணலில் நடந்தான் இருவரும் தங்கள் கரங்களை இறுக்கமாக பற்றி கொண்டனர். அந்த இறுக்கத்தில் இருவருக்குள்ளும் இருக்கும் காதலின் வலிமை, ஆழம் தெரிந்தது. சுண்டல் விக்கும் பையன் அவர்களிடம் வந்தான். 'அண்ணே! சுண்டல் வாங்குங்க அண்ணே அக்காக்கு வாங்கி கொடுங்க அண்ணே ' என்றான்.
ஜெகதீஸ்வரி சங்கரை பார்த்தாள் சங்கரிடம் தனது காதலிக்கு சுண்டல் வாங்கி கொடுக்க கூட காசு இல்லை அவனே அவனை நொந்து கொண்டான். ' நமக்கெல்லாம் ஒரு காதல் தேவையா?' என்று நினைத்தான். ஆனா, இவளை விட்டா உலகில் இவளை மாதிரி ஒரு தேவதையை எங்கே போய் தேடுவது என்றும் நினைத்தான்.
சுண்டல் விற்கும் பையன் சங்கரை விடுவதாக இல்லை. அவனை சொல்லி குத்தமில்லை பாவம் அவனுக்கும் ஒரு பொட்டலம் வித்தால் தானே அன்றைய பொழுதை ஓட்ட முடியும். சங்கர் சங்கடத்தில் நெளிந்தான். ஜெகதீஸ்வரி புரிந்து கொண்டாள். அவள் சொன்னா
"வேண்டாம்பா... எனக்கு சுண்டல் பிடிக்காது" -என்றாள்.
இதற்கு மேலும் இவர்களிடம் வாங்க சொல்லி நேரத்தை வீணாக்க விரும்ப வில்லை அந்த சுண்டல் விற்கும் பையன் இடத்தை காலி செய்தான் .
சங்கருக்கு எல்லாமே புரிந்துவிட்டது. தன்னிடம் காசு இல்லாததை புரிந்து கொண்டு தான் ஜெகதீஸ்வரி அப்படி நடந்து கொண்டாள் என்று. அவன் ஜெகதீஸ்வரியின் கையை பிடித்தான். சங்கரின் கண்கள் கலங்கி இருந்தது. ஜெகதீஸ்வரியை பார்த்தான் கண்களில் இருந்து கண்ணீர் எட்டி பார்த்தது.
"என்னடா எதுக்கு என்ன காதலிச்சே ..."- சங்கர்
" ஏன் உங்களுக்கு என்ன கொறச்சல் " -ஜெகதீஸ்வரி
"ஒரு சுண்டல் கூட வாங்கி தர முடியல்லையே "
"சுண்டல் தான் காதலா? எனக்கு எதுவுமே வேண்டாம் என சங்கர் போதும்"
சங்கர் நெகிழ்ந்து விட்டான் அந்த வார்த்தையில். கண்ணீர் பெருக்கெடுத்தது. ஜெகதீஸ்வரி கண்ணீரை துடைத்து விட்டாள்.
இன்னும் அங்கு இருக்க பிடிக்காமல் இருவரும் அவரவர்கள் வீட்டுக்கு ஒன்றாக கிளம்பினார்கள்.
சங்கருக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. என மீது இந்த அளவுக்கு பாசம் வச்சிருக்கவளை நான் எப்படி தான் கண்கலங்காம காப்பாத்த போகிறேன் என்று நினைத்து பார்த்து கலங்கினான்.
மறுநாள் ஜெகதீஸ்வரியை வழக்கமாக சந்திக்கும் இடத்தில் காணாமல் தவித்தான். அவளிடமிருந்து எந்த வித தகவலும் இல்லாது போகவே என்ன ஏது என்று ஒன்றும் தெரியாமல் குழம்பினான். அவன் சிந்தனைகள் பல விதங்களில் சிந்தித்தான்.
அவனுக்கு ஜெகதீஸ்வரியிடம் இருந்து தகவல் வந்தது. இவர்களின் காதல் அவள் வீட்டில் தெரிந்து விட்டது என்று.
இப்போ அவங்க வீட்டில் எச்சரிக்கையாகிட்டாங்க ஜெகதீவரியை வெளியே விடுறதே இல்லை....வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டாள். அந்த வகையில் சங்கருக்கு முன்னேயே சிறை வாசம் அவளுக்கு பரிச்சயமானது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு வீட்டு சிறையின் கொடூரம் இருந்தது.
அவள் படிப்பை நிறுத்திட்டு வேற மாப்பிள்ளை பார்கிறதிலே தீவிரமாகிட்டாங்க...ஜெகதீஸ்வரியின் சொந்த முறைமாமன் பூபாலனுக்கு பேசி முடிச்சிட்டாங்க. பரிசெமெல்லாம் போட்டுட்டாங்க. ஆனா, சங்கருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பூபாலனுக்கு வயசு முப்பதுக்கு மேலே( ஜெகதீஸ்வரிக்கு பதினாலு வயசு). ஆனாலும் பரவாயில்லைன்னு கட்டி வைக்க முடிவு பண்ணிடாங்க.
குழப்பத்தில் தவித்தான் சங்கர் . என்ன செய்வது என்றே தெரியவில்லை. தன் கைக்கு கிடைத்த தேவதையை தவற விட்டு விடுவோமோ என்று பயந்தான் தினம் தினம் துடித்தான்.
அப்போது தான் ஒரு நாள் ஜெகதீஸ்வரியிடம் இருந்து சங்கருக்கு ஒரு அவசர கடிதம் வந்தது.
"உடனே என்னை கூட்டி போகலைன்னா செத்திடுவேன்" இது தான் அந்த கடிதத்தில் எழுதி இருந்தது.
சங்கருக்கு கவலையும் குழப்பமும் ரெட்டை தண்டவாளமாக நெஞ்சு பூரா ஓடிச்சு.
"ஜெகதீஸ் ......" என்று கதறியபடி அப்படியே தலையில் கையை வைத்து சுவரோடு சாய்ந்தான் ...
தொடருவேன்....
இதுவரை வந்தவைகள்....
இதுவரை வந்தவைகள்....
நூறாவது நாள் : ஆட்டோ சங்கர் 1(தொடர்)

இந்த தொடருக்கு வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி ...
ReplyDeleteதொடர்ந்து வரும் 'ஆட்டோ சங்கர்' தொடரின் பாகங்களுக்கும் வாக்களிக்குமாறு நட்புடன் கேட்டு கொள்கிறேன் ...