சமீபமாக நாளைய சினிமா என்ற கருத்தரங்கில் பேசிய இயக்குனர் மிஷ்கின் ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டார். 'நந்தலாலா' படத்தை எடுத்துவிட்டு கிட்டத்தட்ட நான் ரோட்டுக்கே வந்துவிட்டேன். நல்ல வேலை தயாரிப்பாளர் அகோரம் எனக்கு 'யுத்தம் செய்' என்ற படத்தை கொடுத்தார். அதுல ஒரு குத்து பாட்டு இருக்கு. அதனால அந்த படம் சூப்பர் ஹிட் ஆகும். எனக்கு வேற வழி தெரியலங்க.
நான் எடுத்த நந்தலாலா படத்தை பார்க்க தியேட்டர்ல ஆளே இல்லை. பிறகு எப்படி நான் நல்ல சினிமா எடுக்க முடியும். நாளைய சினிமா நல்ல சினிமாவாக இருக்க வேண்டும்னா நல்ல பார்வையாளர்கள் வேண்டும் சார். எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு சினிமாவை உருவாக்குகிறோம், அதை 'காப்பி' என்ற ஒரே வார்த்தையில் தூக்கிப் போடாதீங்க... உலகமே 'காப்பி' தாங்க... இல்ல 'டீ' தாங்க என்று சீரியசாக காமெடி அடித்தார்.
அதன் பிறகு பேசிய இயக்குனர் பாலுமகேந்திரா, நான் கடைத் தெருவுக்குப் போனால் கால் கிலோ தக்காளி, கால் கிலோ வெங்காயம் வாங்கும் போதே ஒரு சினிமா டி.வி.டி.யும் வாங்க முடியும். உலக சினிமா என்பது இப்போது நமக்கு அருகில் வந்துவிட்டது.
நீங்கள் எந்த சினிமாவை எடுத்தாலும் அது எங்கிருந்து வந்தது என்பதை மக்கள் சுலபமாக சொல்லிவிட முடியும். ஆனால் அதே விஷயத்தை நீ எப்படி படமாக எடுத்திருக்கிறாய் என்பதே இங்கு முக்கியம் என்று சொல்லியதோடு, நாளைய சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் பேச மாட்டேன் அதை எடுத்துக் காட்டுவேன் என்றும் சொன்னார்.

No comments:
Post a Comment