தமிழக அரசு சினிமாத்துறைக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி வருகிறது என்பது தெரிந்த சங்கதிதான். தமிழ் பெயர்களுக்கு வரி விலக்கில் தொடங்கி, சூட்டிங் கட்டண குறைப்பு, கேளிக்கை வரி ரத்து, திரைப்பட நகர் உருவாக்கம் என பல்வேறு சலுகைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இந்நிலையில் திரைத்துறை சார்பில் இன்னுமொரு முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
புதுமுகங்கள் நடித்திருக்கும் “புதிய காவியம்” என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பாட அதிபர் பி.எல்.தேனப்பன் கலந்து கொண்டு சி.டி.யை வெளியிட்டார். பாடலாசிரியர் முத்துலிங்ககம் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய தயாரிப்பாளர் திரவிய பாண்டியன், தமிழக அரசு மாவட்டம்தோறும் தியேட்டர்கள் கட்டி, சிறு பட்ஜெட் படங்களை திரையிட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்தார்.
அவர் பேசுகையில், சிறு பட்ஜெட் படங்களை வெளியிட தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டமாக உள்ளது. இதனால் சிறு பட தயாரிப்பாளர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் கருணாநிதி திரைப்பட துறைக்கு ஏராளமான சலுகைகள் வழங்கி வருகிறார். மாவட்டந்தோறும் தியேட்டர்கள் கட்டி சிறு பட்ஜெட் படங்களை திரையிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.புது தயாரிப்பாளர்கள் தற்போது படங்கள் எடுப்பது மிகவும் சிரமமாக உள்ளது.அப்படியே படத்தை எடுத்து முடித்தாலும் அவற்றை திரையிட தியேட்டர்கள் கிடைப்பது இல்லை. எனவே அரசே சென்னை போன்ற பெருநகரங்களில் 5 தியேட்டர்களையும் மாநகராட்சி பகுதிகளில் 4 தியேட்டர்களையும் மற்ற மாவட்ட தலைநகரங்களில் 3 தியேட்டர்களையும் கட்ட வேண்டும். அந்த திரையரங்குகளுக்கு குறைந்த வாடகை நிர்ணயித்து சிறு பட்ஜெட் படங்களை திரையிட ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.

No comments:
Post a Comment