பில்லா 2 படத்தின் வசூல் எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லாததால், அந்தப் படத்தை வெளியிட்ட கேரள விநியோகஸ்தருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்லதால் பரபரப்பு கிளம்பியுள்ளது.
பில்லா 2 படம் கேரளாவில் பெரிய அளவில் வெளியிடப்பட்டது. அஜீத்துக்கு கேரளாவில் பெரிய அளவு ரசிகர்கள் வட்டம் கூட கிடையாது. ஆனாலும், பில்லா 2 படத்துக்கு கொடுக்கப்பட்ட பெரும் விளம்பரங்களைப் பார்த்து பெரும் விலைக்கு வாங்கி வெளியிட்டிருந்தார் அந்த விநியோகஸ்தர்.
ரூ 1.50 கோடிக்கு இந்தப் படத்தை அவர் வாங்கியிருந்ததாகத் தெரிகிறது.
முதல் இரு தினங்கள் மட்டும் ஓரளவு கூட்டம் வந்ததாகவும், அடுத்த தினத்திலிருந்து வசூல் படுபாதாளத்துக்கு போய்விட்டதாகவும் அவருக்கு தகவல்கள் வர ஆரம்பித்தனவாம்.
இதனால் மனமுடைந்துபோயிருந்த அவருக்கு, நேற்று முன்தினம் பில்லா 2-ன் வசூல் விபரம் அறிக்கையாக கொடுக்கப்பட்டதாம். இதைப் படித்துக் கொண்டிருந்தபோதே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டதாம். இதைத் தொடர்ந்து அவர் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
பில்லா 2 ஏ சான்றிதழ் பெற்ற படம். எனவே வரிவிலக்கு கிடையாது. 30 சதவீத கேளிக்கை வரி போக, விநியோகஸ்தருக்கு 50 சதவீத நஷ்டத்தை கேரளத்தில் இந்தப் படம் ஏற்படுத்தக்கூடும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
ரசிகர்கள் ஆத்திரம் - மறுப்பு
இந்த செய்தி வெளியானதும் அஜீத்தின் ரசிகர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். இது பொய்ச் செய்தி என்று மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் இது பொய்ச் செய்தி என கூறி வருகின்றனர்.
"ஒரு ஆங்கில நாளிதழ்தான் இந்த செய்தியை வெளியிட்டது. ஆனால் அதற்கு ஆதாரம் எதுவும் இல்லை," என்று தெரிவித்துள்ளனர். ஆனால் பெரும்பாலான ஆங்கில ஊடகங்கள் இந்த செய்தியை தொடர்ந்து வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ரூ 17 கோடி?
கேரள நிலவரம் இப்படி என்றாலும், தமிழகத்தில் இந்தப் படம் முதல் வாரத்தில் ரூ 17 கோடியை சம்பாதித்துள்ளதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment