நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி இன்று பொறுப்பேற்றார்.
முன்னதாக இன்று காலை அவர் தனது இல்லத்தில் இருந்து காந்தி சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டுக்கு சென்றார். அங்கு மரியாதை செலுத்திய பின் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி பதவியேற்றார்.
பதவி விலகிச் செல்லும் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் புதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோர் ஜனாதிபதி மாளிகையில் இருந்து நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு சம்பிரதாய முறைப்படி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
அவர்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் வரவேற்று நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் முற்பகல் 11.23 மணியளவில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பதவியேற்பு விழா தொடங்கியது. தேசிய கீதம் இசைக்கப்பட்ட பிறகு உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங், குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பின்னர் தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, பிரணாப் முகர்ஜிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிரணாப் பதவிப்பிரமாணம் ஏற்றவுடன் 21 குண்டுகள் முழங்கின. அதன் பின்னர் குடியரசுத் தலைவர் பொறுப்பேற்கும் கோப்பில் அவர் கையெழுத்திட்டு உரையாற்றினார்.
பிரணாப் உரை
நாட்டின் குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரையில் கூறியதாவது:
மேற்கு வங்கத்தின் சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து நாட்டின் உயரிய பொறுப்புக்கு இன்று நான் வந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு அரணாக இருப்பது குடியரசுத் தலைவர் அலுவலகம்தான். நாட்டு மக்களுக்காக விறுப்பு வெறுப்பின்றி பாடுபடுவேன்.
நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டும் என்பதை சொல்லில் மட்டுமல்ல. செயல்பாட்டிலும் வெளிப்படுத்துவேன். கூட்டாட்சியை அடிப்படையாகக் கொண்ட நமது அரசியல் சாசனத்தைக் காப்பதே முதல் கடமை. காந்தி, நேரு, அம்பேத்கர் ஆகியோர் கண்ட கனவு நிறைவேற நிச்சயம் பாடுபடுவேன்.
நாட்டு நலனுக்காக விறுப்பு வெறுப்பின்றி பணியாற்றுவேன். இந்தியாவில் இருந்து வறுமையைப் போக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். ஆண், பெண், ஏழை என்ற வேறுபாடுகளின்றி அனைவரும் நமது சமூகத்தின் ஒரு அங்கமாகக் கருத வேண்டும்.
முதல் இரண்டு உலகப் போருக்குப் பின்னர் பனிப்போரை இந்த உலகம் சந்தித்தது. 1990களுடன் அது முடிவுக்கு வந்துவிட்டது. இந்த 3 போர்களுக்குப் பின்னர் இப்பொழுது பயங்கரவாதம் என்னும் 4-வது உலகப் போருக்கு மத்தியில் நிற்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான போராக உலகப் போராக உருவெடுத்திருக்கிறது.
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தப் போரில் இந்தியா முதன்மைப் பாத்திரம் வகித்து வருகிறது. பயங்கரவாதம் என்பது உலகின் எந்த மூலையில் உருவானாலும் அது கொடியதுதான். நமது நாட்டின் எல்லையைக் காக்க ராணுவம் போராடுகிறது. நாட்டுக்குள் இருக்கும் எதிரிகளை அழிக்க காவல்துறையினர் தீரமுடன் போராடுகின்றனர் என்றார் அவர்.
நிகழ்ச்சிகள் முடிந்ததும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், பிரதீபா பாட்டீலும் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஜனாதிபதி மாளிகை முன் பிரணாப் முகர்ஜிக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
ஜனாதிபதி மாளிகைக்குள் சென்றதும் பிரணாப் முகர்ஜியிடம் விடைபெற்றுக் கொண்டு பிரதீபா பாட்டீல் துக்ளக் சாலையில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டுச் செல்கிறார். மரியாதை நிமித்தமாக அவருடன் பிரணாப் முகர்ஜியும் செல்வார்.
பிரதீபா பாட்டீலுக்கு புனே நகரில் பங்களா தயாராகி வருகிறது. அதுவரை டெல்லி பங்களாவில் தங்கி இருப்பார்.
இன்றைய பதவியேற்பு விழாவில் பிரதமர் மன்மோகன்சிங், சபாநாயகர் மீராகுமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநில ஆளுநர்கள் கலந்து கொண்டனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு கொல்கத்தாவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு டெல்லி வந்தார். நேராக டெல்லி தல்கதோரா சாலையில் உள்ள பிரணாப் முகர்ஜி வீட்டுக்கு சென்று அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பதவி ஏற்பு நேரத்தின்போது நாடாளுமன்றத்துக்கு மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. டெல்லி வான் எல்லையும் விமானப்படையால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.
விமான எதிர்ப்பு ஏவுகணைகளும், சுகோய்-30, மிக்-21 ரக போர் விமானங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.
No comments:
Post a Comment