உலகப் புகழ் பெற்ற மோனலிசாவுக்குப் பின்னால் மறைந்துள்ள மர்ம முடிச்சுகள் விரைவில் அவிழ்க்கப்படும் சாத்தியக் கூறுகள் உருவாகியுள்ளன. மோனலிசாவின் எலும்புக் கூடு என்று கூறப்படும் ஒரு பெண்ணின் எலும்புக் கூட்டை இத்தாலிய தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது மோனலிசா ஓவியத்திற்கு போஸ் கொடுத்த பெண்ணின் எலும்புக் கூடு இது. டாவின்சியின் ஓவியத் திறமைக்கு மோனலிசா ஓவியம்தான் மிகப் பெரிய உதாரணமாக இன்றுவரை திகழ்கிறது. மந்திரப் புன்னகையுடன் காட்சி அளிக்கும் அந்த மோனலிசா ஓவியத்தின் பின்னால் பல மர்ம முடிச்சுகள் உள்ளன. அந்த ஓவியத்தில் இருப்பது ஆண் என்று ஒரு தரப்பு ரொம்ப நாட்களாக கூறி வருகிறது. அந்த ஓவியத்தில் இருக்கும் பெண் யார் என்பதும் பெரும் மர்மமாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், இத்தாலியின் புளாரன்ஸ் நகரில் உள்ள ஒரு கான்வென்ட்டில் புதைக்கப்பட்ட ஒரு எலும்புக்கூட்டை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது லிசா ஜெரார்டினி என்ற பெண்ணின் எலும்புக் கூடு என்று கூறப்படுகிறது. இந்தப் பெண்தான் மோனலிசா ஓவியத்திற்குப் போஸ் கொடுத்தவர் என்றும் நம்பப்படுகிறது.
மிகப் பெரிய பட்டு வியாபாரியாக அக்காலத்தில் திகழ்ந்தவரான பிரான்செஸ்கோ டெல் ஜியோகோண்டோ என்பவரின் மனைவிதான் இந்த ஜெரார்டினி.
இவர் தனது கணவரின் மரணத்திற்குப் பின்னர் கன்னியாஸ்திரி ஆகி விட்டார். 63 வயதில், 1542ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி செயின்ட் உர்சுலா கான்வென்ட்டில் மரணமடைந்தார். அங்கேயே அவர் புதைக்கப்பட்டார். அந்த கான்வென்ட் பின்னாளில் அப்படியே கிடப்பில்விடப்பட்டு விட்டது. பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. அங்கு கடந்த ஆண்டு ஜெரார்டினியின் உடல் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டும் பணிகள் தொடங்கின.
இந்த நிலையில் தற்போது ஒரு பெண்ணின் எலும்புக் கூடு முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த எலும்புக் கூட்டை சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.மேலும் டிஎன்ஏ சோதனையும் செய்து பார்க்கப்படவுள்ளது. இதன் பின்னர் இப்பெண்ணின் இரு குழந்தைகளின் எலும்புக் கூட்டுடன் இவை ஒப்பிட்டுப் பார்த்து உறுதி செய்யப்படும். ஏற்கனவே ஜெரார்டினியின் குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment