மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னாவின் பங்களா ஆசீர்வாத் ஒரு காலத்தில் பேய் பங்களா என்று அழைக்கப்பட்டதாம்.
60களில் மும்பையின் பந்த்ரா பகுதியில் உள்ள கார்ட்டர் ரோட்டில் இருந்த 2 அடுக்குமாடி கொண்ட பாழடைந்த பங்களாவை அப்பகுதியினர் பேய் பங்களா என்று தான் அழைத்தனர். அதனால் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. அப்போது பாலிவுட் நடிகர் ராஜேந்திர குமார் அந்த பங்களாவை ரூ.60,00க்கு வாங்கினார். அங்கு பேய் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து அவர் பூஜை செய்துவிட்டு குடியேறினார். பங்களாவுக்கு தனது மகள் டிம்பிள் பெயரை வைத்தார். அந்த வீட்டுக்கு வந்த பிறகு அவரின் பல படங்கள் ஹிட்டாகின. அவருக்கு பெயரும், புகழும் கிடைத்தது.
அதன் பிறகு அவர் பாலி ஹில் பகுதியில் இன்னொரு பங்களாவை கட்டி அதற்கும் டிம்பிள் என்றே பெயரிட்டார். தொடர்ந்து கார்ட்டர் ரோட்டில் உள்ள பங்களாவை மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னாவுக்கு ரூ.3.5 லட்சத்திற்கு விற்றார். ராஜேஷ் கன்னாவும் அந்த பங்களாவின் பெயரை டிம்பிள் என்றே வைக்க ஆசைப்பட்டார். ஆனால் ராஜேந்திர குமார் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஆசீர்வாத் என்று பெயர் சூட்டினார்.
ராஜேஷ் கன்னா ஆசீர்வாதில் குடியேறிய பிறகு அவரை வெற்றி மகள் விடாமல் துரத்தினாள். அவரது படங்கள் சக்கைபோடு போட்டன. இதையடுத்து அவர் இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டாரானார். பின்னர் டிம்பிள் கபாடியாவை மணந்தார். சிறிது காலம் கடந்து அவரது படங்கள் தோல்வியடையத் துவங்கின.
ராஜேஷ் கன்னாவின் மனைவியும், மகள்களும் அவரை விட்டுப் பிரிந்து சென்றனர். கூடவே வெற்றித் திருமகளும் ஆசீர்வாதை விட்டு வெளியேறினாள். அதன் பிறகு அவர் படங்கள் இன்றி திண்டாடினார். ஆசிர்வாதில் இருக்க பயந்து தூங்க மட்டுமே வீட்டுக்கு வந்தார். அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு அண்மையில் இறந்தார்.
அந்த பங்களாவை ராஜேஷ் கன்னாவின் நினைவாக அருங்காட்சியமாக மாற்ற அவரது மகள்கள் முடிவு செய்துள்ளனர். அது என்ன தான் ஒரு காலத்தில் பேய் பங்களாவாக இருந்தாலும் தற்போது அதைப் பார்ப்பவர்கள் ராஜேஷ் கன்னாவின் பங்களா என்று தான் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment