ஓடிசா, பீகார் போன்ற வடமாநிலங்களிலிருந்து சமீபகாலமாக ஏராளமான குழந்தைகள் தமிழகத்திற்கு குறிப்பாக திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களுக்கு வேலைக்காக அழைத்து வரப்படுகின்றனர்.
இதற்காக மர்ம நபர்கள் மூலம் சில நேரங்களில் குழந்தைகள் கடத்தி வரும் சம்பவங்களும் நடந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒடிசாவில் இருந்து 7 சிறுமிகளை வேலைக்காக தமிழகத்திற்கு ரெயில் மூலம் கடத்தி வந்த பீகாரை சேர்ந்த மாலீக் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று காலை கவுகாதி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் குழந்தைகள் கடத்தி வரப்படுவதாக சென்டிரல் ரெயில் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சென்டிரல் ரெயில் நிலைய போலீசார் நடத்திய சோதனையில் 40 குழந்தைகள் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் அழைத்து வரப்பட்டது தெரியவந்தது.
பின்னர் அந்த குழந்தைகளை அழைத்து வந்த ஸ்டீபன் சன்(வயது 21) என்ற வடமாநில வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தைகள் அனைத்தும் 14 வயதுக்குட்பட்ட மெகாலயா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், படிப்பதற்காக பெங்களூரில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு அழைத்து வரப்பட்டதும் தெரிய வந்தது. அதையடுத்து போலீசார் அவர்களது உடைமைகளை சோதனை செய்தததில் சிறுவர்களை படிப்பதற்கு அழைத்து செல்வதற்கான முறையான ஆவணங்கள் இருந்தது. எனினும் போலீசார் சந்தேகத்தின்பேரில் அன்பு இல்லம், கருணை இல்லம் போன்ற தொண்டு நிறுவனங்களை சேர்ந்த நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்களும் வந்து குழந்தைகளின் ஆவணங்களை ஆய்வு செய்தனர். பின்னர் குழந்தைகள் அனைவரும் பெங்களூரில் உள்ள ஆசிரமத்திற்கு படிப்பதற்காக அழைத்து செல்லப்படுவது உறுதியானது.
பின்னர் சென்டிரல் ரெயில்வே போலீசார் அந்த குழந்தைகளுக்கு மதிய உணவு வாங்கி கொடுத்து, பெங்களூர் மெயில் ரெயில் மூலம் அவர்களை வழியனுப்பி வைத்தனர். குழந்தைகள் வேலைக்காக கடத்தி வரப்பட்டதாக வந்த தகவலால் நேற்று சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment