சென்னை மற்றும் தென்னிந்திய நகரங்களில் தூதரகங்கள் உட்பட முக்கிய இடங்களைத் தகர்க்க சதித் திட்டம் தீட்டியதாக இலங்கையைச் சேர்ந்த தீவிரவாதி ஜாகிர் உசேன் சிக்கினான்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி சித்திக்தான் தம்மை அனுப்பி வைத்ததாக வாக்குமூலம் அளித்தான் ஜாகிர் உசேன். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-ன் கட்டளைப்படி தூதரக அதிகாரி சித்திக், ஜாகிர் உசேனை சென்னைக்குள் ஊடுருவ அனுப்பி வைத்ததும் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து சிவபாலன், முகமது சலீம் ஆகிய தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். இந்த தீவிரவாதிகளிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சதித் திட்டத்தில் மலேசியாவில் பதுங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த முகமது ஹூசைனுக்கும் முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து முகமது ஹூசைனை கைது செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. இந்த நிலையில் முகமது ஹூசைனை இலங்கைக்கு மலேசியா நாடு கடத்தியது.
இலங்கைக்கு முகமது ஹூசைன் நாடு கடத்தப்பட்டது முதல் தங்களிடம் அவனை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா கோரி வருகிறது. ஆனால் இலங்கையோ, இன்னமும் விசாரணை நடைபெறுகிறது என்று கூறி இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.
இதனால் தேசிய புலனாய்வு அமைப்பினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். சென்னை உட்பட தென்னிந்திய நகரங்களின் முக்கிய இடங்களைத் தகர்க்கும் சதித் திட்டத்துக்கான நிதியை இதர தீவிரவாதிகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தவன் முகமது ஹூசைன் என்பதால் அவனிடம் விசாரணை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இருக்கின்றனர்
No comments:
Post a Comment