ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 20 கிலோ அரிசியின் அளவு திடீரென 10 கிலோ, 15 கிலோ என குறைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை காலங்களில் திடீரென்று ரேஷன் அரிசியின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல், பச்சை நிற ரேஷன் கார்டுகளுக்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்படி, ரேஷன் கடைகளில் 10 கிலோ புழுங்கல் அரிசியும், 10 கிலோ பச்சரியும் பொதுமக்கள் வாங்கி பயன்பெற்று வந்தனர். தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடியே 86 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இலவச அரிசி வாங்கி வந்தனர். கடந்த அக்டோபர் மாதம் வரை பொதுமக்களுக்கு எந்த தட்டுப்பாடும் இல்லாமல் 20 கிலோ அரிசி இலவச வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் கடந்த நவம்பர், டிசம்பர் மாதம் ரேஷன் கடைகளுக்கு தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலம் வழங்கப்படும் அரிசியின் அளவு திடீரென குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, அக்டோபர் மாதம் ஒரு ரேஷன் கடையில் எத்தனை பேர் அரிசி வாங்கினார்கள், எத்தனை கிலோ அரிசி விற்கப்பட்டுள்ளது என்பது கணக்கிடப்பட்டது. அதன் அடிப்படையில்தான் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான அரிசி ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி விவரம் வெளியாகி உள்ளது.
குறிப்பாக கடந்த மாதம் அதிகம் பேர் ரேஷன் அரிசி வாங்கவில்லை. ஆனால், டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை வருவதால் ஏராளமான பொதுமக்கள் அரிசி வாங்க ரேஷன் கடைக்கு சென்றுள்ளனர். இதில் சிலருக்கு 15 கிலோவும், சிலருக்கு 10 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்பட்டது.
அரசு குறிப்பிட்ட முழுமையான அளவு அரிசி கிடைக்காததால், பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இப்படி தகராறு செய்பவர்களுக்கு மட்டும் சரியான அளவு அரிசி வழங்கப்படுகிறது. ஒன்றும் சொல்லாதவர்களிடம், அடுத்த மாதம் முதல் வாரமே வந்தால் 20 கிலோ அரிசி தருகிறோம் என்று ரேஷன் கடை ஊழியர்கள் பேசி திருப்பி அனுப்புகிறார்கள்.
இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கூறும்போது, “ஒரு ரேஷன் கடைக்கு 1500 ரேஷன் கார்டு என்றால் ஒரு கார்டுக்கு 20 கிலோ என்ற கணக்கில் மாதம் 300 மூட்டை அரிசி, அதாவது 30 ஆயிரம் கிலோ அரிசி ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும். ஒரு மாதம் 250 மூட்டை விற்பனையானால், அடுத்த மாதம் ஸ்டாக் உள்ள 50 மூட்டையையும் சேர்த்து கூடுதலாக 250 மூட்டை என்று ஒவ்வொரு மாதமும் 300 மூட்டை கணக்கு வைத்து அரிசி சப்ளை செய்யப்படும்.
ஆனால் நவம்பர், டிசம்பர் மாதம் 50 மூட்டை ஸ்டாக்கை கணக்கில் வைத்து கூடுதலாக 200 மூட்டை அரிசி மட்டும் வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு மாதமாக எல்லா ரேஷன் கடைகளிலும் 35 சதவீதம் முதல் 40 சதவீதம் அரிசி குறைவாக சப்ளை செய்யப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் அதிகம் பேர் அரிசி வாங்க வருகிறார்கள். கடைசி இரண்டு வாரம் குறைந்த அளவே அரிசி ஸ்டாக் இருப்பதால், கடைசியாக ரேஷன் அரிசி வாங்க வருபவர்களுக்கு குறை வான அளவு அரிசியே பொதுமக்களுக்கு வழங்க முடிகிறது“ என்றனர்.
இதுகுறித்து சிவில் சப்ளை கார்ப்பரேஷன் அதிகாரிகளிடம் கேட்டபோது, “ரேஷன் அரிசிக்கு வழங்கப்படும் மானியம் ஆண்டுதோறும் உயர்வதால், விநியோகத்தை குறைக்கவும், போலி கார்டுகளை கண்டுபிடித்து ரத்து செய்யவும் குடிமைப்பொருள் வழங்கல் துறை கூட்டங்களில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ரேஷன் கடைகளில் நடத்திய ஆய்வுகளில், ஒவ்வொரு மாதமும் 65 முதல் 75 சதவீத அரிசி மட்டும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுவது தெரியவருகிறது. அதனால் அரிசி சப்ளை வாய்மொழி உத்தரவு மூலம் குறைக்கப்பட்டுள்ளது“ என்றனர்.
ரேஷன் கடைகளில் இலவச அரிசி ஒதுக்கீட்டை குறைப்பதன் மூலம், பொதுமக்களுக்கு வழங்கப்படும் விநியோகத்தை குறைக்க தமிழக அரசு மறைமுக நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். விருதுநகர் மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜசேகரன் கூறும்போது, ‘‘கடந்த மாதம் ரேஷன்கடை ஊழியர்கள் கார்டுதாரார்களுக்கு விநியோகம் செய்தததாக, 1 முதல் 3 சதவீதம் வரை கூடுதல் அரிசி வழங்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. கடைகளில் கூடுதல் இருப்பு இருந்தால் தவறாக வெளிச்சந்தையில் விற்க வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் கடைகளுக்கு தேவையான அளவு மட்டும் வழங்கப்படுகிறது. விநியோகத்தை பாதிக்கும் வகையில் எந்த ரேஷன் கடைக்கும் அரிசி அளவு குறைக்கப்படவில்லை’’ என்றார்.
குறைவான அரிசி
வடபழனி தெற்கு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த கலாவதி கூறியதாவது: மாதந்தோறும் அரசு அறிவித்தப்படி 20 கிலோ அரிசி வழங்கப்படுவதில்லை. அதற்கு மாறாக வெறும் 15 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, பருப்பு, பாய்மாயில் என பல பொருட்கள் கேட்டாலும் கொடுப்பதில்லை. இது குறித்து ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களிடம் கேட்டால் முறையாக எந்த பதிலும் கூறுவதில்லை. அரசு சார்பில் எங்களுக்காக ஒதுக்கப்படும் பொருட்களை வழங்காமல் கொள்ளையடிப்பதிலேயே ஊழியர்கள் குறியாக இருக்கின்றனர் என்றார்.
கோதுமை வழங்குவதில்லை
கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியை சேர்ந்த சண்முகம் கூறும் போது, நான் ஆட்டோ டிரைவர் பணியாற்றி வருகிறேன். 4 குழந்தைகள் உள்ளனர். இந்த வருமானத்தில் தினசரி வாழ்க்கையை ஓட்டுவது சிரமமாக உள்ளது. எங்களை போன்ற ஏழை எளிய மக்களின் நலன் கருதி தான் அரசு 20 கிலோ இலவச அரிசி தருகிறது. ஆனால் அது கூட எங்களுக்கு போதுமானதாக இல்லை. இருந்தாலும் வேறுவழியில்லாமல் வாழ்க்கையை ஓட்டி வருகிறோம். இந்த நிலையில் திடீரென தற்போது 5 கிலோ அரிசி குறைவாக வழங்குகின்றனர். இது குறித்து கேட்டதற்கு அதிகாரிகள் அரசு தரப்பில் 15 கிலோ மட்டும் தர சொன்னதாக தெரிவிக்கின்றனர். இந்த, மாதம் வெளியில் இருந்து தான் அரிசி வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பாமாயில், சர்க்கரை, கோதுமை முறையாக வழங்குவதில்லை என்றார்.
தமிழகம் முழுவதும் 33,520 ரேஷன் கடைகள் உள்ளன. 1.75 கோடி அரிசி வாங்குவதற்கான கார்டு, 10.59 லட்சம் சர்க்கரை கார்டு, 62 ஆயிரத்து 354 போலீசாருக்கான காவலர் கார்டு, எந்த பொருளும் வாங்க கார்டு 61 ஆயிரத்து 453 என மொத்தம் 1.86 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. மாதந்தோறும் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்வதற்காக, 3.16 லட்சம் டன் அரிசி, 35 ஆயிரம் டன் சர்க்கரை, 13 ஆயிரத்து 780 டன் கோதுமை, 11,530 டன் துவரம் பருப்பு, 8,240 டன் உளுந்தம் பருப்பு தேவைப்படுகிறது.
No comments:
Post a Comment