“டோய்... தப்பித்தவறிகூட அந்த குகை பக்கம் போயிடாத. அங்க பூதம் இருக்கு. ஒண்ணு ரெண்டில்ல, ஏழு பூதமாக்கும். புதயல அதுதான் காப்பாத்துது. யாராவது எடுக்கப்போனா சும்மா உடாது. அலாக்கா தூக்கி விழுங்கிப்புடும்” & இப்படித்தான் சின்னஞ்சிறுசுகளிடம் பூச்சாண்டி காட்டி வருகின்றனர் கிராமத்து பெரிசுகள்.
காலப்போக்கில் காற்றில் பரவும் இந்த தகவலுக்கு புது மெருகு பூசி ஆளாளுக்கு கூட்டியோ, குறைத்தோ வெவ்வேறு கதைகள் சொல்கின்றனர். புதையலை காவல் காக்கும் பூதம் பற்றிய கிலி அப்பகுதியில் பலரிடம் காணப்படுகிறது. அவர்கள் சொல்லும் குகைக்குள் தங்கமும் வைரமும் எப்படி வந்தது? அதிர்ச்சிகரமான பதில்களும், ஆச்சரிய தகவல்களும் பின்னிப்பிணைந்து கிடக்கின்றன.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பி.என்.பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ளது கோட்டைக்கரடு. இந்த கரட்டின் மீது திப்பு சுல்தான் கோட்டை சிதைந்த நிலையில் இன்றும் காணப்படுகிறது. எங்கும் அடர்ந்த புதர்கள். மொட்டையாக, வழுக்கையாக, கூர்ப்பானதாக.. என பல வடிவில் பாறைகள். இங்குதான் குகைக்குள் 7 கொப்பரைகள் அதாவது 7 அண்டாக்கள் நிறைய புதையல் இருப்பதாக சொல்கின்றனர் மக்கள்.
‘புதையல் எடுக்கப் போனா, பூதம் விழுங்கிடும்’ என்ற பயமுறுத்தலையும் மீறி சிலர் நெஞ்சை நிமிர்த்தி குகைக்குள் சென்றிருக்கின்றனர். கும்மிருட்டாக இருக்கும் குகையில் பாதை தெரிவதற்காகவும், எதிரே ஏதும் அபாயம் இருக்கிறதா என்பதை உணரவும், விஷப்பூச்சிகளிடம் இருந்து தப்பிக்கவும் தீப்பந்தம் ஏந்திச் சென்றனராம். குகைக்குள் நுழைந்து சில அடி தூரம் சென்றதுமே தீப்பந்தம் படாரென்று அணைந்திருக்கிறது. தைரியமாய் உள்ளே போன வீராப்பு ஆசாமிகள் குலைநடுங்கிப்போய் குகையை விட்டு தலைதெறிக்க ஓடி வந்த சம்பவம் அடிக்கடி நடந்திருக்கிறது.
நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்து அதற்கான காரணங்கள், பழங்கதைகளை விவரிக்கின்றனர் மக்கள்...
ஏழு பூதத்தின் வேலைதான் அது. அதுனால முடியாதது ஒண்ணுமே இல்ல. புதையல் தேடிப் போனவங்க உசிரோடு திரும்பினதா சரித்திரம் இல்ல. அது.. வெள்ளைக்கார ஆட்சி இந்தியாவுல காலூன்றி, வேரூன்றின நேரம்.. அப்ப மேட்டூர் பகுதி திப்பு சுல்தான் ஆளுகைல இருந்திச்சு. தன்னை பாதுகாத்துக்க கரட்டின் மீது திப்பு சுல்தான் கோட்டை கட்டினான். எதிரிகள் நெருங்கின சூழ்நிலையில, தப்பி தலைமறைவாகி பதுங்கிக்கொள்ள இந்த கோட்டைதான் அவனுக்கு பயன்பட்டது. கோட்டையூரில் இருந்து இது 15 கி.மீ. தூரத்துல இருக்கு.
புதையலை பூதம் காவல் காக்கும் குகையும் இங்கதான் இருக்கு. கோட்டைக்கரட்டில் இருந்து கோட்டையூருக்கு ரகசிய சுரங்கம் இருக்கு. பிரிட்டிஷ் படையிடம் இருந்து தப்பிய திப்பு சுல்தான் படை வீரர்கள் இது வழியாத்தான் தப்பினாங்க.
இங்குள்ள குகையிலதான் 7 கொப்பரை நிறைய தங்கம், வைரம், வைடூரிய நகைகள் இருக்கு. அதை காலம் காலமா ஏழு பூதம்தான் காவல் காக்குது. யாரையும் பூதம் உள்ள விடாது. மீறிப் போனவங்க உசிரோட திரும்பினதா சரித்திரம் இல்ல. 20 வருஷம் முன்னாடி வரை, குகைக்குள்ள 10 அடி தூரமாவது போய்ட்டு வர்ற அளவுக்கு இருக்கும். இப்ப நுழையக்கூட முடியாத அளவுக்கு புதர் மண்டியிருக்கு” என்கின்றனர் மக்கள்.
சிலர் தங்கள் அனுபவத்தை பீதி குறையாமல் விவரிக்கின்றனர்.. “நான்கூட குகைக்கு போயிருக்கேன். தீப்பந்தம் அணையிறாப்புல இருந்திச்சு. உடனே வெளியே வந்துட்டேன். அந்த கண நேர வெளிச்சத்தில உள்ளே பாத்தேன். குகை முழுக்க மனித எலும்புக்கூடு குவிஞ்சு கிடந்தது. புதையல் தேடிப் போனவங்களை பூதம் அலாக்கா தூக்கி விழுங்கி எலும்புக்கூட்டை அங்கயே வீசியிருக்கு. மனுஷங்க பாச்சா பூதத்துக்கிட்ட பலிக்காது” என்கின்றனர்.
ஒரு ஆள் மட்டும் நுழையும் அளவுக்கு இருக்கிறது குகைப் பாதை. மலை உச்சியில் இருந்து மேட்டூர் அணை சுவர் வரை கற்கள் அடுக்கப்பட்டதற்கான அடையாளம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தண்ணீர் வற்றும் நேரத்தில் மட்டும் இது வெளியே தெரிகிறது.ஊரை விட்டு வெகு தூரம் தள்ளி இருப்பதால் யாரும் குகைப் பக்கமோ, திப்பு சுல்தான் கோட்டைப் பக்கமோ செல்வதில்லை. கோட்டையூருக்கும், குகைக்கும் இடைப்பட்ட ரகசிய வழி குறித்த மர்மம் இன்னும் நீடிக்கிறது. கோட்டையூர் & கோட்டைக்கரடு & திப்புசுல்தான் கோட்டை., ரகசிய சுரங்கப்பாதை... இவை எல்லாமே மர்மமாய் இருக்கிறது.
ஹலோ ...ஹலோ....என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க கருத்தை சொல்லிட்டு அப்படியே ஒரு ஓட்டையும் போட்டு போங்களேன் ...
உங்கள் பதிவுக்கு நன்றி !!!
ReplyDeleteHi bloggers/webmasters submit your blog/websites into http://www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends….
http://www.ellameytamil.com
இப்பகுதியில் செய்திகள், தொழில்நுட்பம், தமிழ் வரலாறு, தமிழ் சினிமா, நகைச்சுவை, கதை, கவிதை, சினிமா பாடல்கள் மற்றும் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் இங்கே கிடைக்கும்…
http://www.ellameytamil.com