விஜய் டிவியுடன் இணைந்து "கிளோஸப் யுவன் லைவ் இன் கான்ஸர்ட்" நிகழ்ச்சியின் மூலம் சென்னையில் முதன் முறையாக மேடையேறிய யுவன் சங்கர் ராஜா, சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சென்னையை அடுத்து உலக ரசிகர்களையும் தனது இசையால் உற்சாகப்படுத்தபோகிறார் யுவன். ஆம் சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பிப்ரவரி 11, 12 ஆகிய தேதிகளில், வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு (இன்றும் நாளையும் )விஜய் டிவி ஒளிபரப்பு செய்கிறது.
யுவனின் பாடல்களை கேட்க ஆவலோடு இருந்த ரசிகர்களுக்கு ஆரம்பமே அமர்க்களப்படுத்தும் விதத்தில் இருந்தது. இந்நிகழ்ச்சியில் யுவனின் அறிமுகம் வித்தியாசமாகவும், பிரமாண்டமாகவும் அமைந்தது. திரண்டிருந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் அமைக்கப்படிருந்த சுமார் 30 அடி உயர லிஃப்டில் இருந்து ஆரவாரங்களோடும், வானவேடிக்கைகளோடும் திகுதிகுவென வெளிவந்த நெருப்புகளோடும், அந்த உயரமான மேடையில் இருந்து யுவன் இறங்கி வந்தது அனைவரையும் ராசிக்கவைத்தது.
இருபதாயிரம் ரசிகர்கள் திரண்டு வந்திருந்த இந்த இசை நிகழ்ச்சியில், யுவன் இசையமைப்பில் உருவான சூப்பர் ஹிட் பாடல்களை அவருடன் இணைந்தும், தணியாகவும் பல பிரபல பின்னணி பாடகர்கள் பாடினார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிம்பு, தனது நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் 'வானம்' படத்தில் இடம்பெறும் "எவண்டி உன்ன பெத்தான்" மற்றும் "லூசுப்பெண்ணே" போன்ற பாடல்களை பாடி ரசிகர்களை பரவசப்படுத்த, நடிகர்கள் ஆர்யா, ஜீவா, சென்னை 28 படக்குழுவினர்கள், இயக்குநர் அமீர், லிங்குசாமி, கெளதம் மேனன், செல்வராகவன், வெங்கட்பிரபு, பாடலாசிரியர் நா.முத்துகுமார் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்களும் கலந்துகொண்டு ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தினார்கள்.
யுவன் தனது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, பவதாரினி ஆகியோருடன் இணைந்து "ஏழேழு தலைமுறைக்கும் - பன்னையபுரம்" பாடலை பாடினார். அதற்கும் மேலாக இசைஞானி இளையராஜா மேடையில் தோன்றியது நிகழ்ச்சியின் ஹைலட்டாக அமைந்தது. அதிலும் இசைஞானி பாட, அதற்கு யுவன் பியானோ வாசித்தது நிகழ்ச்சிக்கு அதிகமான சிறப்பை சேர்த்தது.
இதையும் படியுங்களேன் ....

No comments:
Post a Comment