உலக கோப்பை கிரிக்கெட் காலிறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
அகமதாபாத்தில் நடந்து முடிந்த இப்போட்டியில், இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை இந்தியா சந்திக்கிறது.
காலிறுதியில் 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 47.4 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
பொறுப்பான யுவராஜ்...
இப்போட்டியில் மிகுந்த பொறுப்புடன் விளையாடி, நிதானமாக பேட் செய்த யுவராஜ் சிங் ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். அவருக்கு பக்க பலமாக இருந்த அணியின் வெற்றிக்கு உறுதுணை புரிந்த சுரேஷ் ரெய்னா ஆட்டமிழக்காமல் 34 ரன்கள் சேர்த்தார்.
சச்சின் டெண்டுல்கரின் 53 ரன்களும், கம்பீரின் 50 ரன்களும் இந்திய அணிக்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்தித் தந்தன.
கோஹ்லி 24 ரன்களும், சேவாக் 15 ரன்களும் எடுத்தனர். தோனி 7 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் பிரட் லீ, டயிட், வாட்சன் மற்றும் ஹஸ்சி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
கட்டுப்படுத்திய இந்திய பந்துவீச்சு...
முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் சேர்த்தது.
அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் வாட்சன் 25 ரன்களையும், ஹதீன் 53 ரன்களையும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் பான்டிங் அபாரமாக பேட் செய்து சதமடித்து, ஆஸ்திரேலிய அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாக உயர்த்தினார். 104 ரன்கள் குவித்த அவர், அஸ்வின் பந்துவீச்சில் ஜாகீர் கானிடம் கேட்ச் தந்து அவுட்டானார்.
மைக்கேல் கிளார்க் 8 ரன்களிலும், ஹஸ்சி 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒயிட் 12 ரன்களே எடுத்த நிலையில், பான்டிங்குக்கு உறுதுணையாக இருந்த ஹஸ்சி 38 ரன்கள் எடுத்தார். ஜான்சன் 6 ரன்கள் எடுத்தார்.
இந்திய தரப்பில் யுவராஜ் சிங், அஸ்வின், ஜாகீர்கான், ஹர்பஜன் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் ரன் எண்ணிக்கை ஓரளவு கட்டுப்படுத்தினர்.
அஸ்வின், ஜாகீர் கான், யுவராஜ் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, பாகிஸ்தானை அரையிறுதியில் பலப்பரீட்சை காணவுள்ளது.
No comments:
Post a Comment