""தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி மே மாதம் கடல்முற்றுகை போராட்டம் நடத்துவோம்,'' என பா.ஜ.,மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பற்றி மக்களுக்கு சந்தேகம் உள்ளது. எந்த ஓட்டுச்சாவடியில் யாருக்கு எவ்வளவு ஓட்டு பதிவாகியுள்ளது என்பது தெரியாமல் இருக்க, ஓட்டு எண்ணிக்கையில் புதிய முறையை பின்பற்றப்போவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இதுபற்றி அலுவலர்களைப் போல, கட்சிகளின் ஏஜென்ட்களுக்கும் விளக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் நான்குபேரை இலங்கை கடற்படையினர் சுட்டுகொன்றுள்ளனர். அவர்களின் உடல்களை மீட்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டியது. மத்திய, மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பா.ஜ., சார்பில் மே மாதம் கடல் முற்றுகை போராட்டம் நடைபெறும். இலங்கையில் தமிழர்கள் மீதான போரில், அந்நாட்டு அரசுக்கு சாதகமாக மத்திய, மாநில அரசுகள் நடந்து கொண்டதாக ஐ.நா.,விசாரணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. செய்த துரோகத்திற்கு இலங்கை அரசு மன்னிப்பு கோர வேண்டும். இனப்படுகொலையை சகிக்க முடியாமல், சங்கரன்கோவிலைச் சேர்ந்த பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்துகொண்டார். எக்காரணத்திற்காகவும், யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.
மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின்போது, சுவாமிக்கு உடுத்த வேண்டிய பச்சை பட்டு அணிவிக்காமல், உடலில் சாற்றியிருந்த துணிகள் பழையவையாக இருந்தன. கோடிக்கணக்கில் காணிக்கை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், சுவாமிக்கு புத்தாடை உடுத்தாதது கண்டிக்கத்தக்கது. சுவாமி பல்லக்கை முறையாக தூக்குவதற்குகூட ஆள் வைக்கவில்லை. இது அலட்சியத்தின் உச்ச கட்டம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும், என்றார். நகர் தலைவர் ராஜரத்தினம், மாநில பிரசார பொதுச் செயலாளர் சசிராமன் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment