இளைஞர் உலக கோப்பை கிரிக்கெட் பைனலில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 3வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கேப்டன் உன்முகுந்த் சந்த் சதம் விளாசினார். ஆஸ்திரேலியாவில் ஐசிசி இளைஞர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பைனலில் இன்று இந்தியாவும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணியும் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 225 ரன் எடுத்தது. பொசிஸ்டூ 120 பந்தில் 6 பவுண்டரியுடன் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை துவக்கியது. 2வது ஓவரில் சோப்ரா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய அபராஜித் 33, விகாரி 4, சோல் 1 ரன்களில் பெவிலியன் திரும்பினர். சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்ந்தாலும் கேப்டன் உன்முகுந்த் சந்த் ஆஸி. பந்து வீச்சை வெளுத்து வாங்கினார்.
பவுண்டரியும் சிக்சருமாக பறக்கவிட்டு அணியின் நெருக்கடியை குறைத்தார். மறுமுனையில் பட்டேல் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். இதனால் இந்திய அணி 47.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 227 ரன் எடுத்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது. உன்முகுந்த் சந்த் 130 பந்தில் 6 சிக்சர்கள் 7 பவுண்டரியுடன் 111 ரன்கள் விளாசினார். பட்டேல் 84 பந்தில் 4 பவுண்டரிகளுடன் 62 ரன் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது உன்முகுந்த் சந்துக்கு வழங்கப்பட்டது. இளைஞர் உலக கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்வது இது 3வது முறை. இதற்கு முன்னர் இந்திய அணி 2000ம் ஆண்டு முகமது கைப் மற்றும் 2008ம் ஆண்டு விராட் கோஹ்லி தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. மேலும் ஆஸ்திரேலிய அணியை இறுதி போட்டியில் இதுவரை எந்த அணியும் வீழ்த்தியது இல்லை என்ற சாதனையையும் இந்திய அணி முறியடித்தது.
No comments:
Post a Comment