சென்னை சட்டக்கல்லூரிக்குள் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதால் போலீசார் வந்தார்கள். கல்லூரிக்குள் போலீசார் நுழைந்ததை கண்டித்து மாணவர்கள் முதல்வர் அறையை முற்றுகையிட்டு 2 மணிநேரம் போராட்டம் நடத்தினர்.
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் நேற்று மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. விபரீதங்கள் எதுவும் நடக்கும் முன்பே முதல்வர் நாராயணபெருமாள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்த உடன் சென்னை உயர் நீதிமன்ற உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில், இன்ஸ்பெக்டர் செல்லப்பா மற்றும் 30 பேர் அடங்கிய போலீஸ் படை கல்லூரிக்கு வந்தது. அப்போது ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள், மற்றொரு பிரிவினரை ஓட, ஓட விரட்டி தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர்.
இதைப் பார்த்த போலீசார் இரு பிரிவினரையும் பிரித்துவிட்டு அவர்களுக்கு நடுவே சுவர் போன்று நின்றனர். இதையடுத்து ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேறினர். போலீசார் சரியான நேரத்தில் வந்ததால் பெரும் கலவரம் தடுக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் கமிஷனர்கள் மகேஷ்வரன், லட்சுமி, உதவி கமிஷனர்கள் ராதாகிருஷ்ணன், குமார் மற்றும் 100 பேர் அடங்கிய போலீஸ் படை கல்லூரி வாசலில் வந்து நின்றது.
இதற்கிடையே கல்லூரிக்குள் போலீஸ் நுழைந்ததை கண்டித்து வளாகத்தில் இருந்த மாணவர் படை பிரிவினர் போராட்டம் நடத்தினர். அப்போது ஒரு மாணவர் க்லலூரி வளாகத்தில் இருந்த உயரமான கட்டிடத்தில் ஏறிக்கொண்டு அங்கிருந்து கீழே குதி்த்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். இதையடுத்து கல்லூரிக்குள் இருந்த போலீசார் வெளியேறினர்.
போலீசார் வெளியேறியவுடன் மாணவர்கள் முதல்வரின் அறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முதல்வரும், பேராசிரியர்களும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கல்லூரி விடுதியில் தங்கி படிப்பவர்கள்.
போராட்டம் நடத்திய மாணவர்கள் கூறுகையில்,
கடந்த மாதம் 16ம் தேதி ஏழுமலை என்ற முன்னாள் மாணவர் தாக்கப்பட்டதையடுத்து 14 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதில் 4 மாணவர்கள் வகுப்புகளுக்கு வருகிறார்கள். அவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்கக் கூடாது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரையும் வேறு சட்டக்கல்லூரிக்கு மாற்ற வேண்டும். அவர்களால் பிற மாணவர்கள் தாக்கப்படும் அபாயம் உள்ளது. இப்பொழுது கூட அவர்களின் ஆதரவாளர்கள் 4 மாணவர்களை தாக்கியதால் தான் பிரச்சனை ஏற்பட்டது.
4 மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதியில் இருக்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் அனைத்தையும் ஒரு வாரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment