பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக யார் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்துக் கணிப்பு கேள்விக்கு 42 சதவீதம் பேர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெயரைக் கூறியுள்ளனர்.
இந்தியாவில் இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடத்தினால் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து என்டிடிவி ஒரு சர்வே நடத்தியுள்ளது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 18 பெரிய மாநிலங்களில் 125 தொகுதிகளில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.
அதன்படி, பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக யார் நிறுத்தப்பட வேண்டும் என்ற கேள்விக்கு 42 சதவீதம் பேர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பெயரைக் கூறியுள்ளனர்.
மூத்த தலைவரான அத்வானிக்கு அதில் பாதியளவுக்கே ஆதரவு கிடைத்துள்ளது. அவருக்கு 23 சதவீதம் பேரும், சுஷ்மா சுவராஜுக்கு 20 சதவீதம் பேரும், அருண் ஜேட்லி, நிதின் கட்காரி உள்ளிட்டோருக்கு 15 சதவீதம் பேரும் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
குஜராத்-ராஜஸ்தானில் மோடிக்கு அதிக ஆதரவு:
குஜராத்திலும் ராஜஸ்தானிலும் தான் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என அதிகபட்ச ஆதரவு கிடைத்துள்ளது. குஜராத்தில் 85 சதவீதம் பேரும் ராஜஸ்தானில் 62 சதவீதம் பேரும் அவரை ஆதரித்துள்ளனர்.
ஒடிஸ்ஸா-பிகாரில் மோடிக்கு ஆதரவில்லை:
ஆனால், ஒடிஸ்ஸா மாநிலத்தில் 27 சதவீதம் பேர் தான் மோடி பிரதமராகலாம் என்று கூறியுள்ளனர். பீகாரில் 31 சதவீதத்தினர் மட்டுமே மோடியை ஆதரித்துள்ளனர்.
பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தலைவருமான பாஜக கூட்டணியைச் சேர்ந்த நிதிஷ் குமார் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்கவே முடியாது என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது. அதே போல ஒடிஸ்ஸா முதல்வரும் பிஜூ ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக்கும் மோடியை ஏற்க மறுத்து வருகிறார்.
No comments:
Post a Comment