மும்பை தாக்குதல் குற்றவாளி தீவிரவாதி அஜ்மல் கசாப்புக்கு மும்பை தனிக்கோர்ட்டு விதித்த மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நேற்று உறுதி செய்தது. இதுகுறித்து மத்திய உள்துறை மந்திரி சுசில் குமார் ஷிண்டேயிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அஜ்மல் கசாப் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்யக்கூடும் என்பதால், அவனுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுமா? என்று கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், 'அப்படி கசாப் கருணை மனு தாக்கல் செய்தால் அதன் மீது குறைந்தபட்ச கால அவகாசத்தில் முடிவு எடுப்போம்' என்றார்.
மேலும், மும்பை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் நீதியின் முன்பு நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும், இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து எடுக்கும் என்றும் ஷிண்டே கூறினார்.
அசாம் கலவரம் தொடர்பாக பாகிஸ்தானில் உள்ள சிலர் போலி வீடியோ காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டு சென்னை, பெங்களூர், புனே, மும்பை ஆகிய நகரங்களில் இருந்து வடகிழக்கு மாநில தொழிலாளர்கள் வெளியேற காரணமாக இருந்தது பற்றிய ஆதாரங்களை அந்நாட்டு அரசுடன் இந்தியா பகிர்ந்து கொள்ளும் என்றும் ஷிண்டே தெரிவித்தார்.
கசாப் விவகாரம் பற்றி உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங் கூறுகையில், கசாப் இன்னும் கருணை மனு தாக்கல் செய்யவில்லை என்றும், தாக்கல் செய்தால் பார்க்கலாம் என்றும் தெரிவித்தார். கசாப்புக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து இருப்பதை வரவேற்றுள்ள மராட்டிய மாநில உள்துறை மந்திரி ஆர்.ஆர்.பட்டீல், அவனுக்கு தண்டனையை எவ்வளவு விரைவில் நிறைவேற்ற முடியுமோ அவ்வளவு விரைவில் நிறைவேற்றுமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்வேன் என்றார்.
No comments:
Post a Comment