வேந்தர் மூவீஸ் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் படம், ‘தில்லு முல்லு’. இது, 1981ல் வெளியான ‘தில்லு முல்லு’வின் ரீமேக். ரஜினி வேடத்தில் சிவா நடிக்கிறார். இஷா தல்வார் ஹீரோயின். எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன் சங்கர்ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். பத்ரி இயக்குகிறார். இந்தப்படத்தின் தொடக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. எஸ்.மதன் வரவேற்றார். கே.பாலசந்தர் தலைமை தாங்கினார். பாரிவேந்தர், எஸ்.ஏ.சந்திரசேகரன், டி.சிவா, வாலி, கார்த்தி, பார்த்திபன், பிரசன்னா, சினேகா உட்பட பலர் கலந்துகொண்டனர். எம்.எஸ்.வியும், யுவன் சங்கர் ராஜாவும் மேடையேறி, ‘தில்லு முல்லு தில்லு முல்லு’ பாடலின் சில வரிகளைப் பாடினர். பிறகு எம்.எஸ்.வி பேசும்போது, ‘எனக்கு யுவனையும் தெரியும், அவரது அப்பாவையும் தெரியும். ஏற்கனவே இளையராஜாவுடன் பணிபுரிந்து இருக்கிறேன். இப்போது அவர் மகன் யுவனுடன் பணிபுரிவதை பாக்கியமாக நினைக்கிறேன். எனக்கு யாருடனும் எந்த ஈகோவும் கிடையாது. எல்லோருடனும் பணியாற்றுவேன். வாலியும், நானும் நல்ல நண்பர்கள். இது வெளியில் மட்டும்தான். எனது இசையில் அவர் பாடல் எழுத வந்துவிட்டால், நல்ல பாடல் வரும்வரை கடுமையாக சண்டை போடுவோம். பிறகு மறந்துவிடுவோம்’ என்றார். யுவன் சங்கர் ராஜா பேசுகையில், ‘எம்.எஸ்.வி போன்ற சாதனையாளர்களுடன் பணிபுரிவதை நினைத்து என்னால் பேச முடியவில்லை. அவ்வளவு பரவசமாக இருக்கிறது’ என்றார். பிறகு எம்.எஸ்.வியின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்.
No comments:
Post a Comment