பீகாரில் தலித் பெண் ஒருவரை அவரது மகன்களும், உறவினர்களும் சேர்ந்து அடித்து, நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் உள்ள லால்கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்தவர் சோம்னா தேவி. கணவரை இழந்த அவருக்கு திலிப் பாஸ்வான், சோட்டு பாஸ்வான், சந்தீப் பாஸ்வான் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சோம்னா தேவியின் மகன்களும், உறவினர்களும் சேர்ந்து அவரை அடித்து, உதைத்து நிர்வாணமாக்கி கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து சோம்னா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
எனது மகன்களும், உறவினர்களும் சேர்ந்து என் சொத்துக்களை அபகரிக்கப் பார்க்கின்றனர். அதனால் அவர்கள் என்னை கம்பால் அடித்து, திட்டி, நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். எனது மகன்கள் திலீப் பாஸ்வான், சோட்டு பாஸ்வான், சந்தீப் பாஸ்வான் மற்றும் உறவினர்கள் ராம்ஜி பாஸ்வான், பின்டு பாஸ்வான்,
கௌதம் பாஸ்வான், முன்னி குமாரி, முனியா தேவி, கமலா தேவி ஆகியோர் தான் என்னை தாக்கி, அவமானப்படுத்தியவர்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சோம்னா கயாவில் உள்ள அனுராக் நாராயண் மகத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உள்ளூர்வாசிகள் கூறுகையில்,
சோம்னா பள்ளியில் குழந்தைகளுக்கு மதிய உணவு சமைத்துப் போட்டு பிழைப்பை நடத்துபவர். அவரது நடத்தை மீது அவரது மகன்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர்கள் அவரை வீட்டை விட்டே வெளியேற்றினர். குஜராத் மாநிலம் சூரத்தில் வாழும் ஒரு மகன் அண்மையில் தான் பீகார் வந்தார். அப்போது அவரின் தாயின் நடத்தைப் பற்றி உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது சகோதர்கள், உறவினர்களுடன் சேர்ந்து சோம்னாவுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்து அவ்வாறு செய்தனர் என்றனர்.
No comments:
Post a Comment