முன்னாள் திமுக அமைச்சர் பொன்னேரி க.சுந்தரத்தின் வீட்டை அதிமுகவினர் அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் மீஞ்சூர் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
மீஞ்சூர் பாலாஜி நகரில் வசித்து வருகிறார் க.சுந்தரம். இவர் கடந்த
1996-2001-ம் ஆண்டில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தார். இவரது மகன் தமிழ் உதயன். சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலின் போது அதே பகுதியில் வசிக்கும் அதிமுக ஒன்றிய துணைச் செயலாளராக இருக்கும் சுந்தரத்துடன் தமிழ் உதயனுக்கு மோதல் ஏற்பட்டது. இதனால் முன் விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை மீஞ்சூரில் கால்பந்துப் போட்டி ஒன்று நடைபெற்றது. இந்த சமயத்தில் தமிழ் உதயனுக்கும், அதிமுக ஒன்றியச் செயலாளர் சுந்தரத்தின் மகன் தமிழரசனுக்கும் இடையே மோதல் மூண்டது. இதையடுத்து அங்கிருந்தோர் இருவரையும் விலக்கி விட்டு அமைதிப்படுத்தினர்.
ஆனால் நேற்று இரவு 8 மணி வாக்கில் திடீரென தமிழரசன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் உருட்டுக்கட்டைகள் சகிதம் முனனாள் அமைச்சர் வீட்டுக்குள் புகுந்து தாறுமாறாக அடித்து நொறுக்கினர். கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கித் தள்ளினர். தடுக்க வந்த வேலையாட்களையும் போட்டு அடித்தனர்.
சத்தம் கேட்டு ஓடி வந்தார் சுந்தரத்தின் மனைவி எழிலினி. அவரை கத்தியைக் காட்டி மிரட்டி விரட்டினர். பின்னர் அந்தக் கும்பல் ஓடி விட்டது. சம்பவம் நடந்தபோது முன்னாள் அமைச்சர் சுந்தரமும், அவரது மகன் தமிழ் உதயனும் வீட்டில் இல்லை.
பின்னர் விரைந்து வந்த தமிழ் உதயன் திமுகவினர் புடை சூழ போலீஸ் நிலையம் வந்தார். அதேபோல தமிழரசன் தலைமையில் அதிமுகவினரும் திரண்டு வந்தனர். அங்கு இரு தரப்பும் போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டது. இருப்பினும் போலீஸார் அவர்களை அமைதிப்படுத்தி இரு தரப்பிலும் கொடுக்கப்பட்ட புகார்களைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த அடிதடி வன்முறையால் மீஞ்சூர் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
No comments:
Post a Comment