சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த ஜுனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்திய ஜுனியர் கேப்டன் உன்முக் சந்த் 111 ரன்கள் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தார். டெல்லியை சேர்ந்த உன்முக் சந்த் அங்குள்ள செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் படித்து வருகிறார்.
விளையாட்டு 'கோட்டா'வில் கடந்த ஆண்டு இந்த கல்லூரியில் சேர்ந்த உன்முக் சந்த், தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதால் கல்லூரியில் அவரது வருகை பதிவு குறைந்தது. இந்த கல்லூரி விதிப்படி விளையாட்டு `கோட்டா'வில் படிப்போருக்கு ஆண்டு வருகை பதிவு குறைந்தது 33.33 சதவீதம் இருக்க வேண்டுமாம். ஆனால் உன்முக் சந்த்தின் வருகை பதிவு அதற்கும் கீழாக இருந்ததால் இரண்டாம் செமஸ்டர் தேர்வு எழுத அவருக்கு கல்லூரி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. இந்த விவகாரம் இப்போது சர்ச்சையாக கிளம்பி இருக்கிறது.
மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அஜய்மக்கான் இது குறித்து கூறுகையில், 'இந்த நடவடிக்கை முற்றிலும் நியாயமற்றது. அவரை தேர்வு எழுதவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு பதிலாக இது போன்ற விளையாட்டு வீரருக்கு பொருத்தமான மாற்றுவழியை கண்டுபிடிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து டெல்லி பல்கலைக்கழகத்துடனும், சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்துடனும் பேசுவேன். இது போன்ற வீரர்களிடம் தேர்வு எழுத முடியாது என்று சொல்வதற்கு பதிலாக அவர்களை அழைத்து, இங்குள்ள பிரச்சினைகளை விரிவாக எடுத்து சொல்ல வேண்டும். அதன் பிறகு சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்கு ஸ்பெஷல் தேர்வுகளையும் நடத்தலாம்' என்றார்
இந்திய கேப்டன் டோனியும், ஜுனியர் கேப்டன் உன்முக் சந்த்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். இதுபற்றி, ‘இந்த பிரச்சினை, இந்தியாவில் விளையாட்டுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பதை காட்டுகிறது. இந்த சம்பவம் வேதனை அளிக்கிறது’ என்று ட்விட்டர் இணையதளத்தில் டோனி குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment