ஆசிரியர் தகுதி தேர்வில்,தேர்வு எழுதிய 6.76 லட்சம் பேரில் வெறும் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதால், தேர்ச்சி பெறாதவர்களுக்கு அக்டோபர் 3-ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் எனஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர், தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று மத்திய அரசு, கடந்த 2009-ம் ஆண்டு சட்டம் இயற்றியது.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 1,027 தேர்வு மையங்களில் நடந்த தேர்வை 6 லட்சத்து 76 ஆயிரம் பேர் எழுதினர். 10 நாட்கள் இடைவெளிக்கு பின் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியிடப்பட்டது.
இந்நிலையில்,ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று நள்ளிரவு 2 மணியளவில், தகுதி தேர்வு முடிவுகளை www.trb.tn.nic.in என்ற தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதில், 90 சதவீதம் பேர் 150 மதிப்பெண்களுக்கு 65 மதிப்பெண்கள்தான் பெற்றுள்ளனர். ஆனால், 90 மதிப்பெண் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும்.
நேற்று இரவு வெளியிடப்பட்ட தகுதி தேர்வு முடிவுகளில் சுமார் 2448 பேர் மட்டும்தான் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுதியவர்கள் பெற்ற மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியோர் அவர்களின் தேர்வு எண்ணை அதில் பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.
ஆசிரியர் தகுதி தேர்வில் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து வருகிற அக்டோபர் 3-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் சவுத்திரி இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,"ஆசிரியர் தகுதித் தேர்வை 6 லட்சத்து 76 ஆயிரத்து 863 பேர் எழுதினார்கள். இதில் 2,448 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாள்-1 தேர்வில் 1,735 பேரும், தாள்-2 தேர்வில் 713 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 768 பேரும், பெண்கள் 1,680 பேரும் அடங்குவர். தேர்ச்சி விகிதம் 0.70 சதவிகிதமாகும். தாள்-1-ல் உடுமலைப்பேட்டையை சேர்ந்த எம்.பிரியா 150 மதிப்பெண்ணுக்கு 122 மதிப்பெண் பெற்று முதல் ரேங்க் பெற்றார். தாள் 2-ல் கணிதம்- அறிவியல் பாடப்பிரிவில் நாகப்பட்டினம் வேதாரண்யத்தைச் சேர்ந்த பி.சித்ரா 142 மார்க் எடுத்து முதலிடம் பிடித்தார்.
சமூக அறிவியல் பாடப்பிரிவில் கம்பத்தைச் சேர்ந்த அருள்வாணி 125 மதிப்பெண் பெற்று முதலிடம் வகித்தார். தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதால் வெற்றி பெறாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அக்டோபர் மாதம் 3-ந்தேதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மேலும் ஒரு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்விற்கு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு தேர்விற்கும் 3 மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. இத்தேர்வை எழுத கட்டணம் செலுத்த தேவையில்லை.புதிதாக யாரும் விண்ணப்பிக்கவும் முடியாது.
ஏற்கனவே விண்ணப்பித்து தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே எழுத முடியும். மீண்டும் தேர்வு எழுதுபவர்களுக்கு விரைவில் ஹால் டிக்கெட் வழங்கப்படும். தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பதற்கு கடிதம் அனுப்பப்படும். தேர்வு முடிவுகளை www.trb.tn.nic.in இணை தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
கட்-ஆப் மதிப்பெண் குறைக்கப்படும்?
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தது.கணித தேர்வுக்கு விடையளிக்க நேரம் போதவில்லை.அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை என்று தேர்வு எழுதியோர் பலரும் குற்றம்சாட்டினர். இதனால் தேர்ச்சிக்கான கட்-ஆப் மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்று தேர்வு எழுதியோர் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டதால் கட்-ஆப் மதிப்பெண்ணை குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம் எனத்தெரிகிறது.
No comments:
Post a Comment