ஜீவா, பூஜா ஹெக்டே, நரேன், நாசர் மற்றும் பலர் நடித்து இருக்கும் படம் 'முகமூடி'. மிஷ்கின் இயக்க, கே இசையமைத்து இருக்கிறார். யு.டிவி நிறுவனம் இப்படத்தினை தயாரித்து இருக்கிறது.
ஒரு சூப்பர் ஹீரோ கதையை இயக்க இருப்பதாக மிஷ்கின் அறிவித்த போது, சூர்யா, விஷால், ஆர்யா என பல பேரிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, அந்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஜீவா. தன் நெருங்கிய நண்பரான நரேனை இப்படத்தின் வில்லன் ஆக்கினார் மிஷ்கின்.
'மிஸ் இந்தியா' அழகி பூஜா ஹெக்டே இப்படத்தில் நாயகியாக நடித்து இருக்கிறார். ஒரு சாதாரண மனிதன் எப்படி சூப்பர் ஹீரோவாக உருவாகிறான் என்பதை திரைக்கதையாக்கி இருக்கிறார் மிஷ்கின்.
தமிழில் வெளிவரும் முதல் சூப்பர் ஹீரோ படம் 'முகமூடி' என்பதால் படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் FIRST LOOK TEASER, போஸ்டர்கள் என ஜீவா சூப்பர் ஹீரோ உடையில் இருக்கும் காட்சிகள் வெளியானபோது திரையுலகினர் பலரும் பாராட்டு தெரிவித்தார்கள்.
'முகமூடி' படத்தின் இசையை விஜய் வெளியிட்டார். 'வாய மூடி சும்மா இருடா', 'நாட்டுல..', ' மாயாவி..' ஆகிய பாடல்கள் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. 'வாய மூடி சும்மா இருடா' பாடல் இளைஞர்களின் காலர் டியூனாகவும், அனைத்து FM ரேடியோக்களில் அவ்வப்போது ஒலிபரப்பப்பட்டும் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.
' இவன் புரூஸ்லி, இவன் காதல், இவன் உலகம், ஒரு அசாத்தியமான சவாலை எதிர்கொள்ளும்போது, இவன் தன்னை உணர்கிறான், முகமூடி பிறக்கின்றான்' என படத்தின் டிரெய்லரிலே கொஞ்சம் போல கதையை கூறி இருப்பது இப்படத்திற்கு பலம்.
'யுத்தம் செய்' படத்தில் பின்னணி இசையால் அனைவரையும் கவர்ந்த இசையமைப்பாளர் கே, இப்படத்தில் பாடல்கள் மூலமே அனைவரையும் தன்வசமாக்கி இருக்கிறார்.
மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படம் வெளிவருகிறது என்றாலே ஒவ்வொரு காட்சியையும் மிகவும் மெனக்கெட்டு எடுத்து இருப்பார். அதிலும், இப்படம் சூப்பர் ஹீரோ படம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கிறார்.
ஜீவா இப்படத்திற்காக மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார். 8 கிலோ கனமுள்ள சூப்பர் ஹீரோ உடையைப் போட்டுக்கொண்டு சண்டையிடுவது என மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்.
யு.டிவி நிறுவனத்தின் முதல் நேரடி தமிழ்ப் படத் தயாரிப்பு என்பதால் 'முகமூடி' படத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
FIRST LOOK, டிரெய்லர், பாடல்கள் என அனைத்திற்குமே கிடைத்து இருக்கும் வரவேற்பைப் போலவே படத்திற்கும் கண்டிப்பாக வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது முகமூடி படக்குழு.
குழந்தைகளைக் கவரும்வண்ணம் காட்சிகள் நிறைந்திருக்கும் 'முகமூடி' ஆகஸ்ட் 31ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கிறது.
No comments:
Post a Comment