நிலக்கரி சுரங்க ஊழல் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் பாஜக தலைவர் நிதின் கத்காரி ஆகியோரது வீடுகளை டெல்லியில் முற்றுகையிட முயன்ற அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த கெஜ்ரிவால் உள்ளிட்டோர் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
டெல்லியில் இன்று காலை பிரதமர் மன்மோகன்சிங்கை கெஜிர்வால் தலைமையில் ஒரு குழுவினரும் சோனியா வீட்டை மனிஷ் சிஷோடியா,விஸ்வாஸ் தலைமையிலான குழுவினரும் பாஜக தலைவர் நிதின் கத்காரி வீட்டை சஞ்சய்சிங் தலைமையிலான குழுவினரும் முற்றுகையிட ஒன்று திரண்டனர்.
டெல்லியில் ஏற்கெனவே உஷாராக இருந்த போலீசார் அன்னா குழுவைச் சேர்ந்த அனைவரையும் கூண்டோடு தடுத்து வைத்து அப்புறப்படுத்தினர். அனைவரும் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து கெஜ்ரிவால் தலைமையில் அன்னா ஹசாரேவின் ஆதரவாளர்கள் ஜந்தர் மந்தரில் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய போராட்டம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளதாவது:
டெல்லி போலீசார் எங்களை தடுத்தது பற்றி நாங்கள் ஆச்சரியப்படவில்லை. நான் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததால் தடுத்து வைக்கப்பட்டதாகப் போலீசார் தெரிவித்தனர். இந்த நாட்டின் பொது அமைதிக்கு நான் அச்சுறுத்தலா? அல்லது காங்கிரஸ், பாஜக ஆகியவை அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளனவா? இப்பொழுது தடுத்து வைக்கப்பட்டு நாங்கள் விடுவிக்கப்பட்டாலும் அனைவரும் மீண்டும் ஒன்று கூடி பகல் 12 மணியளவில் தலைவர்களின் வீடுகளை மீண்டும் முற்றுகையிடுவோம். எங்கள் போராட்டத்தை ஒடுக்க டெல்லி மெட்ரோ ரயில் சேவையை நிறுத்தியிருப்பது என்பது அவசரகாலத்தை நினைவுபடுத்துகிறது என்றார் அவர்.
No comments:
Post a Comment