ராஸ் டெய்லர் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 115 ரன்னில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பெங்களூரில் இன்று துவங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் டெய்லர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, இந்திய பந்துவீச்சாளர் ஜாகீர் கான் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தார். நியூசிலாந்தின் துவக்க ஆட்டக்காரர் மெக்கல்லம் ரன் ஏதும் எடுக்காமல் ஜாகீர் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் வந்த கனே வில்லியம்சன் 17 ரன்களில் வெளியேறினார். ஓரளவு சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மற்றொரு துவக்க ஆட்டக்காரர் கப்தில் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஓஜா பந்தில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 29 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது.
உணவு இடைவேளைக்குப் பின்னர் கேப்டன் டெய்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது அதிரடியால் நியூசிலாந்து அணி சரிவிலிருந்து மீள ஆரம்பித்தது. டெய்லருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய பிளைன் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய டெய்லர் சதம் அடித்தார். சதம் அடிக்க அவர் வெறும் 99 பந்துகளே எடுத்துக்கொண்டார். சிறிது நேரத்தில் பிராங்க்ளின் 8 ரன்னில் அவுட்டானார்.
அடுத்த சில நிமிடங்களில் டெய்லர் 113 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வான் விக்கும், பிரேஸ்வெல்லும் இணைந்து சிறப்பாக ஆடினர். இருவரும் ரன்குவிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரம் வெளிச்சமின்மை காரணமாக முதல்நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது நியூசிலாந்து அணி 81.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்திருந்தது. வான் விக் 63 ரன்னுடனும், பிரேஸ்வெல் 30 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் ஓஜா 4 விக்கெட்டுகளும், ஜாகீர் கான், அஷ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஒரு கட்டத்தில் சரிவிலிருந்த நியூசிலாந்து அணி டெய்லர் மற்றும் வான் விக்கின் சிறப்பான ஆட்டத்தால் இப்போது வலுவான நிலையை அடைந்துள்ளது. நாளை இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment