நிலவில் கால் வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்டிராங் இந்தியா வந்தபோது அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
நீல் ஆம்ஸ்டிராங்கும், அவருடன் நிலவில் நடந்த எட்வின் ஆல்டரினும் பூமி திரும்பிய பிறகு உலக முழுவதும் சுற்றுப்பயணம் செய்தனர். அதன் ஒரு பகுதியாக அவர்கள் இந்தியா வந்தனர். அவர்கள் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்து பேசினர். அந்த சந்திப்பின்போது முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங்கும் அங்கிருந்தார்.
இந்நிலையில் அண்மையில் லண்டன் சென்ற நட்வர் சிங் ஆம்ஸ்டிராங்கின் மரண செய்தியைக் கேளிவிப்பட்டார். அப்போது அவர் ஆம்ஸ்டிராங் குறி்த்து கூறுகையில்,
நீல் ஆம்ஸ்டிராங் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தார். அப்போது புகைப்படக்காரர்கள் அந்த இருவரையும் போட்டோ எடுத்துவிட்டுச் சென்ற பிறகு அங்கு அமைதி நிலவியது.
இதையடுத்து ஏதாவது பேசுமாறு பிரதமர் எனக்கு ஜாடை காட்டினார். உடனே நான் ஆம்ஸ்டிராங்கை பார்த்து, மிஸ்டர் ஆம்ஸ்ட்ராங் நீங்கள் நிலவில் நடப்பதைப் பார்க்க எங்கள் பிரதமர் அதிகாலை 4.30 மணி வரை தூங்காமல் விழித்திருந்தார் என்றேன்.
இதையடுத்துப் பேசிய ஆம்ஸ்டிராங் பிரதமரிடம், மேடம் பிரைம் மினிஸ்டர் உங்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தியதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த முறை ஒழுங்கான நேரத்தில் நிலவில் இறங்குவது போன்று பார்த்துக் கொள்கிறோம் என்று கூற அந்த அறையே கலகலப்பானது என்று கூறியுள்ளார் நட்வர் சிங்.
ஆம்ஸ்டிராங் கடந்த 1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி நிலவில் கால் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment