ம.தி.மு.க., கொள்கைபரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத்,திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அவர், ‘’தி.மு.க.,வால் அவமானப்படுத்தப்பட்ட எம்.ஜி.ஆர்.,திண்டுக்கல்லில்தான் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலில் போட்டியிட விடாமல் அவமானப்படுத்தப்பட்ட ம.தி.மு.க., முதல் கூட்டம் திண்டுக்கல்லில் நடக்கிறது.
இதனால் வரும் காலம் வைகோ.,வின் காலமாக மாறப்போகிறது. ம.தி.மு.க., ஒரு இயக்கமாக செயல்படுகிறது.
அ.தி.மு.க., தொண்டர்கள் மீது எங்களுக்கு கோபம் இல்லை. துரோகத்தை செய்த ஜெ., மீதுதான் எங்களுக்கு கோபம்.
அ.தி.மு.க.,விற்கு நாங்கள் உழைத்த உழைப்பிற்கு, சிந்திய வியர்வைக்கு எங்களுக்கு கிடைத்த பரிசு இதுதானா. நாங்கள் தனித்து நின்றால், பணம் வாங்கி விட்டு தனித்து நிற்பதாக எங்கள் மீது பழி வரும். ஊடகங்கள் குறை கூறும்.
கூட்டணியில் இல்லாத விஜயகாந்துக்கு 41 சீட், கூட்டணியில் இருந்து 7 ஆண்டுகள் உழைத்தவர்களுக்கு 12 சீட்டா.
தி.மு.க., மேடைகளில் ஈ.வே.ராமசாமி, அண்ணாத்துரை, சிட்டிபாபு, பட்டுக்கோட்டை அழகிரி, வைகோ பேசிய மேடையில், வடிவேலு, குஷ்பூ, ராதிகா, செந்தில், சிங்கமுத்து பேசும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.
தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கொள்கை சொல்லி ஓட்டுக்கேட்கவில்லை. இலவசங்களை சொல்லி ஓட்டுக்கேட்கிறார்கள்.
ஜாதிகளை ஒழிப்போம் என்று கூறி விட்டு, ஜாதி கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளனர். நாங்கள் தேர்தலில் நிற்காததால் அ.தி.மு.க., தொண்டர்களிடம் அனுதாபம், தி.மு.க.,தொண்டர்களிடம் கவுரவம், பொதுமக்களிடம் பரிவு கிடைத்துள்ளது.
ம.தி.மு.க., இல்லாததால், அ.தி.மு.க.,வுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காது. துரோகம் செய்தவர்கள் அதற்கான துரோகத்தை அனுபவித்தே தீருவார்கள்.
மே.13 பின்பு பல அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர்கள் எங்கள் கட்சிக்கு வருவார்கள்’’ என்று பேசினார்.

No comments:
Post a Comment