காங்கிரஸ் கட்சியில் இருந்து தங்கபாலுவால் நீக்கப்பட்ட கராத்தே தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்கள். அது போல கவுண்ட்டவுன் கணக்கில் உள்ள டணால் தங்கபாலு கண்டபடியெல்லாம் உளறுகிறார்.
அவரது தில்லு முல்லுகளை நாங்கள் அம்பலப்படுத்திய காரணத்தினால் எங்களை கட்சியை விட்டு நீக்கியதாக அறிவித்து விட்டு எங்களிடம் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது. சத்தியமூர்த்தி பவனுக்குள் நாங்கள் நுழையக் கூடாது என்று உத்தரவிடுகிறார்.
சத்தியமூர்த்தி பவன் என்ன பாட்டன் வீட்டு சொத்தா? அது தனிப்பட்ட யாருக்கும் சொந்தமானது அல்ல. அது காங்கிரஸ் அறக்கட்டளைக்கு சொந்தமானது. இந்த சொத்துக்கு ஆபத்து வரும் போதெல்லாம் நாங்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
1996 ம் ஆண்டில் தலைவர் மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவான போது சத்திய மூர்த்தி பவனை மீட்டு தலைவர் மூப்பனாரிடம் ஒப்படைத்தவர்களில் நானும் ஒருவன். அந்த நேரத்தில் சத்தியமூர்த்தி பவனில் இருந்து ஓடிப்போன தங்கபாலுவுக்கு இந்த வரலாறெல்லாம் நினைவிருக்க நியாயமில்லை.
எங்களை உள்ளே வரக் கூடாது என்று சொல்லுவதற்கு அவருக்கு எந்த அருகதையும் இல்லை. அவ்வப்போது இடையில் புகுந்து இடைக்கால தலைவராக பதவியில் தொற்றிக் கொள்ளும் தங்கபாலு, நள்ளிரவில் குடு குடுப்பைக் காரனைப்போல சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து ஆலோசனை நடத்துகிறார்.
வாஸ்து சாஸ்திரம் என்ற பெயரில் கட்டிடத்தை மாற்றி அமைப்பதாக கூறி சத்தியமூர்த்தி பவனை அடிக்கடி இடித்து தள்ளுகிறார். அதற்கு, அவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நுழைவோம் நான் இந்த அறிக்கை மூலம் அவருக்கு தெரியப்படுத்திக் கொள்வது என்ன வென்றால், நாங்கள் பத்திரிகையாளர்களுக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும், தெரிவித்து விட்டு குறிப்பிட்ட நாளில் கண்டிப்பாக சத்திய மூர்த்தி பவனுக்கு வருவோம். முடிந்தால் தடுத்துப்பாருங்கள் என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment