கூடங்குளம் அணுஉலையை இயக்குவதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், அணுஉலையை இயக்கி மின்சார உற்பத்தியை துவக்க அனுமதி அளித்துள்ளது.
கூடங்குளத்தில் அணுஉலையை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட சில வழக்குகளும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
அணு உலையை இயக்க அனுமதி....
இது தொடர்பாக 300 பக்கங்கள் கொண்ட உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுகிறது. கூடங்குளம் அணுஉலையை தொடங்குவதற்கு எந்த தடையும் இல்லை. இதற்கு மாநில அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் அணுஉலை இயங்குவதற்கு தேவையான அனுமதிகளை வழங்கலாம்.
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் கூடங்குளம் பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். அதன்படி மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கூடிய திட்டங்கள், நிதியுதவி ஆகியவற்றை செய்ய வேண்டும். 1வது மற்றும் 2வது பிரிவு அணு உலைகளை இயக்க அனுமதி வழங்கப்படுகிறது என்று அந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கூடங்குளம் அணுஉலையை இயக்க அனுமதி கிடைத்துள்ளதால், நாட்டில் நிலவி வரும் கடும் மின் தட்டுப்பாடு விரைவில் நீங்கும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.