இந்தியாவில் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று ஏற்பட்ட மின்தடை, உலகின் மிகப் பெரியதாக கருதப்படுகிறது. ரயில்கள் இயங்காததாலும், போக்குவரத்து முடங்கியதாலும் மொத்தம் 70 கோடி பேர் ஒரே நேரத்தில் மின் தடையால் அவதிப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவம் இதுவரை உலகில் வேறு எங்கும் நடந்ததில்லை. மின்தடை முற்றிலும் சீராக ஒரு நாள் வரை ஆகும் என மத்திய மின் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் நீர் மின் நிலையங்கள் இயக்கப்பட்டு, மின் தொகுப்பில் மின்சாரம் பெறப்படும்.
அடுத்த அனல் மின் நிலையங்களில் இருந்து மின்தொகுப்புக்கு மின்சாரம் பெறப்படும். இந்த பணிகள் முடிய ஒரு நாள் ஆகும். மின்தடையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் விவரம்: வடக்கு மண்டலம்: பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், டெல்லி, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் சண்டிகர்.
கிழக்கு மண்டலம்: மேற்கு வங்கம், சட்டீஸ்கர், பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் சிக்கிம். வடகிழக்கு மண்டலம்: அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், திரிபுரா.
மெட்ரோ ரயில் சேவை முடங்கியது
டெல்லி, கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவை 2 மணி நேரம் முடங்கியது. வடக்கு, கிழக்கு, வடகிழக்கு மின் தொகுப்புகள் நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென முடங்கின. இதனால், டெல்லி, கொல்கத்தாவில் மின்சார தடை ஏற்பட்டது. இதன்காரணமாக மெட்ரோ ரயில் சேவை அடியோடு பாதிக்கப்பட்டது. ரயில்கள் ஆங்காங்கே பாதியில் நின்றன. சுரங்கப்பாதைகளில் ரயில் நின்றதால் பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். எமர்ஜென்சி மின்சார சப்ளையை பயன்படுத்தி. பாதி வழியில் நின்ற ரயில்கள் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 2 மணி நேரத்துக்கு பிறகே மெட்ரோ ரயில் மின் சப்ளை சீரானது.
நடுவழியில் நின்ற 300 ரயில்கள்
ஒரே நேரத்தில் 3 மின்தொகுப்புகள் முடங்கியதால் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் மின்சாரம் அடியோடு தடைபட்டது. இந்த மின்சார தடை காரணமாக வடக்கு ரயில்வே, வடக்கு மத்திய ரயில்வே, மேற்கு மத்திய ரயில்வே, கிழக்கு மத்திய ரயில்வே, கிழக்கு ரயில்வே மற்றும் தென் கிழக்கு ரயில்வே கடுமையாக பாதிக்கப்பட்டது. மின்சாரம் திடீரென துண்டிக்கப்பட்டதால் ரயில்கள் நடுவழியில் நின்றுவிட்டன.
ராஜதானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட ரயில்கள் நடுவழியில் நின்றுவிட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. பல நகரங்களில் புறநகர் மின்சார ரயில் சேவை அடியோடு பாதிக்கப்பட்டன. அதில் பயணம் செய்த பயணிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளானார்கள். நீண்ட தூர ரயில்களில் பயணம் செய்தவர்கள் உணவு, குடிநீரின்றி அவதிப்பட்டனர்.
திடீர் மின்தடை காரணமாக மேற்கு வங்காளத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நிருபர்களிடம் கூறுகையில், ''பர்த்வான் மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். சுரங்கத்தில் இருக்கும் அவர்கள் அங்கிருந்து மேலே வருவதற்கு லிப்ட்கள் பயன்படுகின்றன. மின்சாரம் இல்லாததால் லிப்ட்கள் இயங்கவில்லை. இதனால், நூற்றுக்கணக்கான சுரங்க தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர். மின்சப்ளையை சீராக்கி அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
மின்தொகுப்பு முடங்கியுள்ள நிலையில், தேசிய அனல் மின் கழக(என்.டி.பி.சி) தலைவர், நிலக்கரி சப்ளை செய்யும் கோல் இந்தியா நிறுவனத்தின்(சி.ஐ.எல்) மீது குற்றம் சுமத்தியுள்ளார். கோல் இந்தியா நிறுவனம் போதிய நிலக்கரியை சப்ளை செய்யாததால், என்.டி.பி.சியின் மின் உற்பத்தி திட்டங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது என கூறும் அதன் தலைவர் அருப் ராய் சவுத்திரி, ‘‘உலகிலேயே உற்பத்தி குறைந்த நிலையில் அதிக லாபம் ஈட்டிய ஒரே நிறுவனம் கோல் இந்தியா தான்’’ என விமர்சித்துள்ளார்.
சிக்னல்கள் இயங்காததால் போக்குவரத்து நெரிசல்
திடீர் மின் தடை காரணமாக டெல்லியில் போக்குவரத்து சிக்னல்கள் இயங்கவில்லை. இதனால், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் சிரமப்பட்டனர். 400க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் களமிறக்கப்பட்டனர். ஆனாலும், நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதே நேரத்தில் 3 மின்தொகுப்புகள் முடங்கிய தகவல் கிடைத்ததும், பெரும்பாலான அலுவலகங்களில் உள்ள உயர் அதிகாரிகள் தங்கள் ஊழியர்கள் உடனடியாக வீட்டுக்கு புறப்பட அனுமதி கொடுத்தனர்.
ஜெனரேட்டர் உதவியுடன் இயங்கிய அலுவலகங்களில் வேலை செய்தவர்கள் கூட மின்சாரம் வருவதற்கு பல மணி நேரம் ஆகும் என்பதால் வீட்டுக்கு புறப்பட்டனர். ஒரே நேரத்தில் பலரும் வீட்டுக்கு புறப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் மேலும் சிக்கலானது. இதனால், மதியம் வீட்டுக்கு புறப்பட்ட பலர் வீடுபோய் சேர இரவு ஆகிவிட்டது.
டெல்லி ஏர்போர்ட்டில் பாதிப்பு இல்லை
டெல்லியில் நேற்று ஏற்பட்ட மின்தடை காரணமாக இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. டீசல் என்ஜின் ஜெனரேட்டர் மூலம் விமானநிலையம் வழக்கம் போல் இயங்கியது. வடக்கு மண்டல மின்தொகுப்பு நேற்று இரண்டாவது நாளாக முடங்கியதால் தலைநகர் டெல்லி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. விமான நிலையத்தில் டீசல் என்ஜின் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இதனால் மின்தடை ஏற்பட்ட ஒரு நிமிடத்தில் மின்சப்ளை கொடுக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தின் அனைத்து பணிகளும் வழக்கம்போல் நடந்தன. எந்த விமானமும் தாமதமாகவில்லை, ரத்து செய்யப்படவும் இல்லை.
மின் தொகுப்பு முடங்க காரணம் என்ன?
தொடர்ந்து 2 நாட்கள் மின் தடை ஏற்பட்டதற்கு, மாநிலங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மின்சாரத்தை விட கூடுதலாக பயன்படுத்தியதுதான் முக்கிய காரணம். குறிப்பாக, வடக்கு மின் தொகுப்பில் உள்ள உ.பி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் அதிகளவில் மின்சாரம் எடுத்ததால் இந்த மின் தொகுப்பு முடங்கியது. உ.பி. தனக்கு ஒதுக்கப்பட்டதை விட கூடுதலாக 2.60 கோடி யூனிட்களை பயன்படுத்தி உள்ளது. அரியானா 1.3 கோடி யூனிட்டும், பஞ்சாப் 52 லட்சம் யூனிட்டும் கூடுதலாக எடுத்துள்ளன.
இது தொடர்பாக இம்மாநில மின் வாரிய அதிகாரிகளை மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல முறை எச்சரித்தும் இந்த தவறு தொடர்கிறது. இந்த மாநிலங்கள் அதிக மின்சாரத்தை பயன்படுத்துவதற்கு முக்கிய காரணம் பருவமழை பொய்த்ததுதான். இதனால், நீர்மின் உற்பத்தி குறைந்ததோடு, பாசனத்துக்கு பம்பு செட்டுகளை விவசாயிகள் பயன்படுத்துவதால் மின் தேவை அதிகரித்துள்ளது. தவிர, வட மாநிலங்களில் இப்போதும் வெயில் கொளுத்துகிறது. இதனால், வீடுகளில் ஏசி, ஃபேன்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் மின் தேவை அதிகமாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில் விடுமுறை
மின்தொகுப்பு முடக்கத்தால் ஏற்படும் மின்தடை சீராக 10 முதல் 12 மணி நேரம் ஆகலாம். சாலைகளில் சிக்னல் விளக்குகள் எரியாததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும்.
இதை கருத்தில் கொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களை நேற்று மதியம் 3 மணிக்கு மூட உத்தரவு பிறப்பித்தார்.
அதிகாரிகளின் அவசர கூட்டத்தை கூட்டிய மம்தா பானர்ஜி, முதலில் ரயில் போக்குவரத்தை முதலில் சீராக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறினார். புறநகர் ரயில்களை டீசல் என்ஜின்கள் மூலம் இயக்க உத்தரவிட்டார். இதனால் கொல்கத்தாவில் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.
மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல பஸ், லாரிகள் ஏற்பாடு செய்யவும் உத்தரவிட்டார். மின்தடை பிரச்னையை பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டு மக்களிடையை பீதியை ஏற்படுத்த வேண்டாம் என டி.வி.செய்தி சேனல் நிறுவனங்களுக்கு மம்தா வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர் வீட்டுக்கு பூட்டானில் இருந்து மின்சாரம்
டெல்லிக்கு மின்சாரம் வழங்கும் மின்தொகுப்பு முடங்கியதும் மெட்ரோ ரயில், மத்திய டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் விவிஐபிகளின் வீடுகளில் மின் தடை ஏற்பட்டது. இதை சமாளிக்க பூட்டானில் இருந்து நீர் மின்னுற்பத்தி திட்டம் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை அவசரமாக பெற்றனர். ஏறக்குறைய 2 மணி நேர மின்தடைக்குப் பிறகு பிரதமர் இல்லத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது.
எதனால் ஏற்படுகிறது? மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மின் தொகுப்பு மண்டலங்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிது. இதை பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம் நிர்வாகம் செய்கிறது. மாநில மின் வாரியங்கள் இதில் இருந்து தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை பெற்றுக் கொள்ளும்.
மின் தொகுப்பில் மாநிலங்கள் இவ்வளவு மின்சாரம்தான் எடுக்க வேண்டும் என முன்கூட்டியே திட்டமிடப்பட்டு விடும். அதை அந்தந்த மாநிலங்கள் பின்பற்ற வேண்டும். அப்படி இல்லாமல் அதிகமாக மின்சாரத்தை உறிஞ்ச முற்படும்போதுதான் மின்தொகுப்பு முடங்கிபோய் விடுகிறது. அதன்பிறகு யாருக்குமே மின்சாரம் கிடைக்காது.
2001ல் ஏற்பட்ட தடை: இந்தியாவில் இதற்கு முன் கடந்த 2001ம் ஆண்டில்தான் இதுபோன்று மின்தொகுப்புகள் முடங்கி பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டது. அப்போது உ.பி.யில் உள்ள மின் நிலையம் பழுதானதால் வடக்கு மண்டல மின்தொகுப்பு முடங்கியது. இதனால் ஏற்பட்ட மின் தடை நீங்க 24 மணி நேரம் ஆனது. ஆனால் திங்கட் கிழமை ஏற்பட்ட மின்தடை 6 மணி நேரத்தில் சரியானது.
மும்பைக்கு பாதிப்பு வராது: இந்தியா முழுவதும் மின் தடை ஏற்பட்டாலும் மும்பையில் பாதிப்பு இருக்காது. குறிப்பாக தெற்கு மும்பையில். அங்குதான் பங்குச் சந்தை, சர்வதேச விமான நிலையம், உயர் நீதிமன்றம், கவர்னர், அமைச்சர்கள் என விஐபிகளின் வீடுகள் இருக்கின்றன.
மேற்கு மின் தொகுப்பில் மும்பை இணைந்துள்ளது. அதில் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அதிலிருந்து விலகி, வேறு மின் சப்ளை மூலம் மும்பை இயங்கத் தொடங்கும். அதற்கேற்ப அங்கு வசதி செய்யப்பட்டுள்ளது. டாடா பவர் நிறுவனம் இந்த வசதியை அளித்துள்ளது. இதேபோல் டெல்லியிலும் வசதி ஏற்படுத்த வேண்டும் என டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கோரியுள்ளார்.
No comments:
Post a Comment