இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் சமீபத்தில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். நியூசிலாந்துக்கு எதிராக நாளை துவங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தும், அத்தொடருக்கு முன்பே லட்சுமண் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டது சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில் லட்சுமண் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று தனது நண்பர்களுக்கு இரவு விருந்தளித்தார். சச்சின், சேவாக், காம்பீர், ஜாகீர் கான் உள்ளிட்ட மூத்த வீரர்கள் அனைவரும் இந்த விருந்தில் பங்கேற்றனர். ஆனால் இந்திய அணியின் கேப்டனான டோனிக்கு, இந்த விருந்தில் கலந்துகொள்ளுமாறு லட்சுமண் அழைப்பு விடுக்கவில்லை.
'லட்சுமண் அளித்த இரவு விருந்துக்கு உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா?’ என டோனியிடம் இன்று செய்தியாளர்களிடம் கேட்டனர். அதற்கு டோனி, 'இல்லை’ என பதிலளித்தார். தனது ஓய்வு பற்றி பேசுவதற்காக கேப்டன் டோனியை தான் தொடர்புகொள்ள முயன்றும், அது முடியாமல் போனதாக லட்சுமண் கூறியிருந்தது பற்றி, டோனி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, 'நீங்கள் இதனை ஒரு சர்ச்சையாக நினைக்கிறீர்கள். ஆனால் என்னைப் பற்றி தெரிந்தவர்கள், என்னை தொடர்புகொள்வது சற்று கடினம் என, என்னிடம் அடிக்கடி கூறுவதுண்டு. இது ஒன்றும் புதிதல்ல. இவ்விஷயத்தில் என்னை மேம்படுத்திக்கொள்ள நான் பலமுறை முயன்றும், என்னால் அது முடியவில்லை. தனது ஓய்வு பற்றி பேச முயன்றபோது, லட்சுமண் என்னை தொடர்புகொள்ள இயலாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்’ என டோனி கூறினார்.
அப்போது, 'லட்சுமணின் திடீர் ஓய்வுக்கான காரணம் என்ன?’ என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த டோனி, 'இதுபற்றி லட்சுமணிடம் தான் கேட்கவேண்டும்’ என்றார்.
கடந்த நான்கு மாதங்களாக தீவிர பயிற்சி செய்து, சில உள்ளூர் போட்டிகளிலும் ஆடி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக சிறந்த முறையில் தயாராகி இருந்த லட்சுமண், இத்தொடருக்கு முன்னதாகவே திடீரென ஓய்வு பெற்றதால், இந்திய வீரர்களுக்கிடையே ஒற்றுமை இல்லை என்பன போன்ற செய்திகள் உலாவுகின்றன.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகளும் லட்சுமணுக்கு வழங்கப்பட்ட இறுதிவாய்ப்பு என தேர்வுக்குழுவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் எச்சரித்ததே, அவர் திடீரென ஓய்வுபெறக் காரணம் எனவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment