அன்னா ஹசாரே மற்றும் அவரது குழுவினரின் காலவரையற்ற உண்ணாவிரதம் நேற்று வாபஸ் பெறப்பட்டது. அப்போது, 2014 மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த கட்சிக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பரிந்துரைக்குமாறு பொதுமக்களை அன்னா குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளார். வலுவான லோக்பால் அமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அன்னா குழுவினர் 3 பேர் டெல்லியில் கடந்த மாதம் 25ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினர். இந்த உண்ணாவிரதத்தில் அரவிந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, கோபால் ராய் ஆகியோர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வரும் கூட்டம் நாளுக்குநாள் குறையத் தொடங்கியது. இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அன்னா ஹசாரவும் உண்ணாவிரதம் இருந்தார். ஆனாலும், எதிர்பார்த்த அளவு மக்கள் ஆதரவு இல்லை. இந்த முறை அன்னா குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு சார்பில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், நேற்று மாலை உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரேயும், அவரது குழுவை சேர்ந்த 3 பேரும் இளநீர் குடித்து முடித்துக் கொண்டனர்.
அப்போது, அரவிந்த் கேஜ்ரிவால் பேசுகையில்,
2014 மக்களவை தேர்தலில் போட்டியிட புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளோம். இதற்கு என்ன பெயர் வைப்பது என்பதை முடிவு செய்யப்போவது மக்கள்தான். இது ஒரு இயக்கமாக நடத்தப்படும். இதில் தலைவர் என்று யாரும் கிடையாது. யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். அவருக்கான பிரசார செலவுகளையும் மக்கள்தான் செய்வார்கள். லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதோடு, செயல்படாத எம்.பி., எம்.எல்.ஏக்களை திரும்ப அழைக்கவும், நிராகரிக்கவும் மக்களுக்கு அதிகாரம் வழங்கினால் நாங்கள் கட்சி தொடங்க மாட்டோம். ஆட்சியை கைப்பற்றுவது எங்கள் நோக்கம் அல்ல என்றார். அன்னா ஹசாரே பேசுகையில்,ஊழலுக்கு எதிராக நாங்கள் இயக்கம் தொடங்கியபோது, தைரியம் இருந்தால் தேர்தலில் போட்டியிட்டு மக்களவைக்கு வாருங்கள் என்று எங்களை பார்த்து அரசியல் கட்சிகள் சவால்விட்டன. ஆனால், இப்போது, அரசியலில் குதிக்கப்போகிறோம் என்று அறிவித்ததும் அந்த கட்சிகள் எங்களை பார்த்து அச்சப்படுகின்றன என்றார். ராணுவ முன்னாள் தலைமை தளபதி வி.கே.சிங் பேசும்போது,அரசு நிர்வாகம் முடங்கிபோய் கிடக்கிறது. இப்படி போராட்டம் நடத்துவதை தவிர வேறுவழியில்லை என்றார். காங்கிரஸ் கருத்து: அரசியல் கட்சி தொடங்க அன்னா குழு முடிவு செய்துள்ளது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில்,லோக்பால் மசோதா நாடாளுமன்ற குழுவின் பரிசீலனையில் உள்ளது. அமைச்சர்கள் மீது கூறிய புகார்களுக்கு அன்னா குழு எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் தங்கள் கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ள இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment