ஈழத் தமிழருக்காக நான் ஒன்றும் கிழிக்கவில்லை என்று கூறுவோர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிரைவிட்டிருக்க வேண்டியதுதானே என்று திமுக தலைவர் கருணாநிதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கேள்வி- பதில் வடிவிலான அறிக்கை:
கேள்வி: மீனவர் தாக்குதலை கண்டிக்கும் திமுக மத்திய ஆட்சியில் தொடர்வது ஏன் என்று மாநிலங்களவை உறுப்பினரான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த டி. ராஜா கேட்டிருக்கிறாரே?
பதில் : இந்த கேள்விக்கு தி.மு.க. பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். "யோக்கியர் வருகிறார்; சொம்பை எடுத்து உள்ளே வை" என்று கிராமத்தில் சொல்வார்கள். கூட்டணியைப் பற்றியும், தோழமையைப் பற்றியும் ராஜா பேசலாமா? தமிழகத்திலே ஆளுங்கட்சியைப் பற்றி அவருடைய கட்சியும், தோழர் நல்லகண்ணுவும் அன்றாடம் குறை சொல்லுகிறார்கள். ஆனால் ஜெயலலிதா கொடுத்த இஃப்தார் விருந்துக்கு முதல் நபராக தா. பாண்டியன்தான் செல்கிறார். அந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா குறைந்தபட்ச நாகரிகத்தையாவது காட்டி; தா.பாண்டியனை விளித்தார்களா என்றால் இல்லை. ஆனாலும் அடுத்த நாள் முதலமைச்சரைப் பார்க்க தலைமைச் செயலகத்தில் போய் தா.பாண்டியன் காத்திருக்கிறார். ராஜா முதலில் தனது ஆலோசனையை தா. பாண்டியனுக்குச் சொல்லட்டும். தி.மு. க. மத்திய ஆட்சியில் தொடர்வதா இல்லையா என்பதைப் பற்றி இந்த ராஜாவின் யோசனையை நாங்கள் யாரும் கேட்கவில்லை. கேட்கும்போது அவர் இந்த உபதேசத்தைச் செய்யலாம். உலகில் மலிவான ஒன்று உபதேசம்தானே? என்று கூறியிருக்கிறார்.மேலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எந்த அக்கறையையும் இது வரை காட்டாதவர்கள், அக்கறையாக இருப்பதைப் போல வேடம் போடுபவர்கள் எல்லாம் உங்களை குறை கூறுவதிலேயே காலத்தைக் கடத்துகிறார்களே? என்ற கேள்விக்கு கருணாநிதி நீண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ள பதில் பட்டியலில், "காய்த்த மரம்தான் கல்லடி படும்" என்பது பழமொழி. இதே போன்றதொரு கேள்விக்கு நேற்றைக்கே பதில் அளித்திருக் கிறேன். இலங்கையில் போர் நடைபெற்ற போது நான் எதுவுமே செய்யவில்லையா?
திமுகவின் ஈழத் தமிழர் போராட்ட பட்டியல்
இதோ பட்டியல்!
14-10-2008 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, இரண்டு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக நேரிடும் என்று தீர்மானம் நிறைவேற்றினோம்.
தீர்மானத்தை பிரதமருக்கு நான் அனுப்பி, வலியுறுத்தியதன் காரணமாக 18-10-2008 அன்று பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயிடம் தொலைபேசியில் பேசினார்.
நமது வலியுறுத்தல் காரணமாக 22-10-2008 அன்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்தில் உறுதியளித்தார்.
24-10-2008 அன்று சென்னையில் பிரமாண்டமான "மனிதச் சங்கிலி
26-10-2008 அன்று பிரணாப் முகர்ஜி சென்னைக்கு வருகை.
12-11-2008 தமிழகச் சட்டப்பேரவையில் இலங்கைத் தமிழர்களுக்காக தீர்மானம் நிறைவேற்றினோம்.
4-12-2008 தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமருடன் சந்திப்பு.
27-12-2008 அன்று கழகப் பொதுக் குழுவிலே தீர்மானம்.
28-3-2009 இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு உதவிட பிரதமருக்கும் சோனியா காந்திக்கும் என் கடிதம் அனுப்பப்பட்டது.
31-3-2009 சோனியா காந்தி எனக்கு நீண்ட பதில் கடிதம்.
7-4-2009 அன்று பிரதமர், சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு தந்தி மூலமாக நான் விடுத்த வேண்டுகோள்.
9-4-2009 அன்று சென்னையில் என் தலைமையில் "இலங்கை அரசே போரை நிறுத்து" என்று முழக்கமிட்ட பேரணி.
21-4-2009 அன்று பிரதமர், சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு நான் மீண்டும் தந்தி. போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடும்படி கேட்டுக் கொண்டேன்.
21-4-2009 அன்று "நாதியற்ற ஈழத் தமிழரைக் காத்திட நடுவணரசுக்கு வேண்டுகோள்" என்று அறிக்கை விடுத்தேன்.
23-4-2009 அன்று ஒரு நாள் முழு அடைப்பும் வேலை நிறுத்தமும் (பந்த்) செய்தோம்.
24-4-2009 அன்று அண்ணா அறிவாலயத் திற்கு உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் வருகை.
27-4-2009 அன்று அண்ணா நினை விடத்தில் உண்ணா விரதம்.
இலங்கை சொன்ன பொய்
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதாக இலங்கை அரசு, இந்திய அரசுக்குத் தெரிவித்து, இந்திய அரசும் அதை நம்பி, போர் நின்று விட்டதாக நான் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கே செய்தி அனுப்பி, அதன் பிறகுதான் நான் அதை நம்பி எனது உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொண்டேன். இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்து விட்டதாக இந்தியாவை மட்டுமல்லாமல் உலக நாடுகளையே ஏமாற்றியது பிறகுதான் தெரிந்தது. இலங்கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக ஒரு மாநில அரசின் முதல் அமைச்சர் என்ற முறையில் என்னால் என்ன செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்திருக்கிறேனா இல்லையா? மாநில அரசுப் பொறுப்பிலிருந்து தி.மு.க. ஏன் விலகவில்லை என்று சிலர் கேட்கிறார்கள். நாங்கள் அப்போது பதவி விலகியிருந்தால் இலங்கை அரசு போரை நிறுத்திக் கொண்டிருக்குமா? ஏற்கனவே இரண்டு முறை ஆட்சிக் கவிழ்ப்பே; இலங்கைத் தமிழர்களுக்கு நாங்கள் உதவியாக இருந்தோம் என்பதற்காக நடைபெற்றதே, அப்போது என்ன நடைபெற்று விட்டது?
நான் கிழிக்கலை...நீங்க ஏன் சாகலை
என் மீது புகார்க் காண்டம் படிக்கும் அந்தக் கூட்டத்திலே உள்ளவர்களை நான் கேட்கிறேன். உங்கள் வாதப்படி நான்தான் எதுவும் செய்யவில்லை; நீங்கள் அப்போது என்ன செய்து கிழித்தீர்கள்? சாகும் வரை உண்ணா விரதம் என்று அறிவித்து விட்டு இலங்கைத் தமிழர்களுக்காக உயிரை விட்டிருக்க வேண்டியதுதானே? நீங்கள் ஏன் அதைச் செய்யவில்லை? என்று கூறியுள்ளார் கருணாநிதி.
No comments:
Post a Comment