மிகவும் அசாதாரணமான வாய்ப்பு ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் அரசுக்கு வழங்கியுள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. குஜராத் மாநிலத்திற்கு மலிவு விலையில் பெட்ரோல் வழங்கினால், தேசிய மின் கட்டமைப்புக்குத் தேவையான மின்சாரத்தை வழங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.
ஜூலை 30ம் தேதியும், 31ம் தேதியும் அடுத்தடுத்து 3 முறை வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்கு மின் கட்டமைப்புகள் செயலிழந்து கிட்டத்தட்ட 19 மாநிலங்கள் இருளில் மூழ்கிப் போயின. இதையடுத்து தேசிய மின் கட்டமைப்புக்கு நிபந்தனையுடன் தேவையான மின்சாரத்தைத் தருவதாக மோடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து குஜராத் மின்சாரத்துறை அமைச்சர் செளரப் படேல் கூறுகையில், மத்திய அரசுக்கு எங்களுக்கு ஆதரவாக நடந்தால், நாங்கள் அவர்களுக்கு உடனடியாக 2000 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் கிரிடுக்குத் தரத் தயாராகவுள்ளோம். இப்போதைக்கு மின்சாரப் பிரச்சினையைத் தீர்க்க இதுதான் ஒரே துரித வழியாகும் என்றார் அவர்.
இப்படி மின்சாரத்தைத் தருவதற்கு மத்திய அரசிடம் குஜராத் அரசு எதிர்பார்ப்பது மலிவு விலையில் பெட்ரோல் மட்டுமே. ஏற்கனவே மின் கட்டமைப்பு சீர்குலைவுக்கு மத்திய அரசை கடுமையாக கண்டித்திருந்தார் மோடி. இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டிருந்த செய்தியில், இதுவும் கூட கூட்டணி தர்மமா பிரதமரே என்றும் அவர் கிண்டலாக கேட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
குஜராத் மாநிலத்தில் உபரி அளவில் மின் உற்பத்தி உள்ளது. அங்கு தேவையான மின்சாரத்தின் அளவு 12,000 மெகாவாட்தான். ஆனால் 15,906 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிலேயே மின்தடையே இல்லாத ஒரே மாநிலமாகவும் குஜராத் திகழ்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment