நேற்றைய
சட்டசபைக் கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை, அதிமுக
அமைச்சர் வைத்தியலிங்கம் தாக்குவது போல் நடந்து கொண்டதால்
பதற்றம் உண்டானது.
தமிழக சட்டசபையின் குளிர்காலக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று,
2014 - 15ம் ஆண்டிற்கான செலவுக்கான நிதிநிலை அறிக்கை குறித்த விவாதம்
நடைபெற்றது.
இந்த விவாவதத்தின் கீழ் பேசிய திமுக
சட்டப்பேரவையின் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், 110வது
விதியின் கீழ் முன்னாள் முதலமைச்சர்
ஜெயலலிதாவால் சுமார் 31 ஆயிரம் கோடி மதிப்பிலான
திட்டங்கள் அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார். ஆனால் தற்போது தாக்கல்
செய்யப்பட்டுள்ள துணை நிதிநிலை அறிக்கையில்,
1751 கோடி ரூபாய்க்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் கதி என்ன என்று
அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு
பதிலளிக்கும் விதமாக பேசிய முதலமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம், முதல்நாள்
அவையில் பேசிய கருத்துக்களையே மீண்டும்
முன்வைத்தார். இது தொடர்பாக ஸ்டாலின்
மீண்டும் பேச முற்பட்ட போது,
அவரைப் பேச விடாமல் ஆளுங்கட்சியினர்
தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
வீட்டுவசதித்துறை
அமைச்சர் வைத்திலிங்கம், எழுந்து நின்று மு.க.ஸ்டாலினை நோக்கி
மிரட்டும் தொணியில் பேசினார். திமுக சட்டமன்ற உறுப்பினர்
ஜெ.அன்பழகன், ஸ்டாலினை தொடர்ந்து பேச அனுமதிக்கும்படி வலியுறுத்தினார்.
இதையடுத்து அவரை வெளியேற சபாநாயகர்
உத்தரவிட்டார்.
இந்த விவாதத்தின் போது,
முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, ‘'பினாமி
முதல்வர்'' என்று ஸ்டாலின் குறிப்பிட்டதும்,
அமைச்சர் வைத்திலிங்கம் எழுந்து நாக்கை துறுத்தி
மிரட்டிகொண்டே, சட்டையை கழட்டிக்கொண்டு அடிக்கப்பாய்வதுபோல்
நடந்துகொண்டார்.
ஸ்டாலினும்
பதிலுக்கு தனது சட்டைப் பட்டன்களைக்
கழற்றி, மார்பைத் திறந்து காட்டி, ‘அடிக்கத்தானே
பாய்கிறாய், அடி'' என பதிலுரைத்தார்.
இதனால்
சட்டசபையில் கூச்சல் ஏற்பட்டது. அதிமுக
சட்டமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக அவையில் எழுந்து நின்று
கூச்சல், குழப்பம், அமளியில் ஈடுபட்ட நிலையில், திமுக
உறுப்பினர்கள் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதனால், திமுக உறுப்பினர்கள் அனைவரையும்
கூண்டோடு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.
வெளியே
வந்த ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பேரவையில் 2014-2015-ம் ஆண்டிற்கான துணை
நிதிநிலை அறிக்கை விவாதத்தில் நான்
பேசத் தொடங்கினேன். எனது உரையில் பல்வேறு
கருத்தினை, ஆதாரங்களுடன், புள்ளி விவரங்களோடு பேச
வந்தேன். இந்த செய்தியறிந்து எனது
பேச்சால் பினாமி ஆட்சிக்கு ஏதாவது
சிக்கல் வந்து விடுமோ என்று
என்னை பேசவிடாமல் வெளியேற்றியிருக்கிறார்கள்.
எனது பேச்சில், கடந்த நிதிநிலை அறிக்கையில்,
முன்னாள் முதலமைச்சர், ஜெயலலிதா 110 விதியின்கீழ் படித்த 36 அறிவிப்புகளும் அதற்கு 31 ஆயிரத்து 208 கோடி ரூபாய் நிதி
ஒதுக்குவதாக அறிவித்துவிட்டு, இப்போது 2-வது துணை மதிப்பீட்டில்
வெறும் 1,751 கோடி ரூபாய்க்கு மட்டுமே
ஒப்புதல் பெறப்படுகிறது என்றால் மற்ற அறிவிப்புகளுக்கு
தொகை ஒதுக்கப்படவில்லையா?. அந்த அறிவிப்புகள் எல்லாம்
வெறும் அறிவிப்புகள் தானா? என்று கேட்டேன்.
அதற்கு
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுந்து
கடந்த 4-ந் தேதி சிறப்பு
கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் நான் எழுப்பிய வினாவிற்கு
50 நிமிடங்களுக்கு மேல் படித்த அறிக்கையையே
மீண்டும் படிக்கத் தொடங்கினார்.
அவர் படித்தது அனைத்தும் உண்மைக்குப் புறம்பானது. அதற்கும் நான் ஆதாரத்தோடுதான் வந்தேன்.
அவர்கள் அடிக்கல் நாட்டியதை எல்லாம் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்
என்று உண்மைக்கு மாறாக அவையில் அறிவிக்கிறார்,
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
அது மட்டுமல்ல; தற்போது எழுந்துள்ள உரத்தட்டுப்பாடு,
மின் கட்டண உயர்வு, பால்
விலை உயர்வு, சத்துணவுத் திட்டத்தின்கீழ்
வழங்கப்படும் முட்டை கொள்முதலில் ஊழல்,
மேலும் மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்குவதிலும்
பெரும் ஊழல் நடந்திருப்பதாகச் செய்திகள்
வந்திருக்கிறது. மேலும் முதியோர்களுக்கு வழங்கப்பட்டு
வந்த ஓய்வூதியம் நிறுத்தம், தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரச்சினை
இவைகளைப் பற்றி எல்லாம் பேச
இருந்தேன்.
ஆனால்,
திட்டமிட்டு எங்களை வம்புக்கு இழுத்து
அவையில் இருந்து வெளியேற்றியிருக்கிறார்கள். அமைச்சர் வைத்திலிங்கம்
தான் ஒரு அமைச்சர் என்பதையும்
மறந்து என்னை அடிப்பது போல்
செயல்பட்டது கண்டிக்கத்தக்கது. இதற்கு சபாநாயகரும் துணை
போகிறார் என்றால் சட்டப் பேரவையை
எப்படி நடத்துகிறார்கள் என்பதை நாட்டு மக்கள்
அறிந்து கொள்ள வேண்டும்' என
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக திமுக உறுப்பினர் துரை
முருகன் கூறுகையில், ‘இது சட்டமன்றமா? சண்டியர்
மன்றமா?'' என கேள்வி எழுப்பினார்.
இன்றைய சூடான செய்திகள் ....

No comments:
Post a Comment