தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்றைய தினம் ஏழைகளின் அடிவயிறு பற்றி எரிகிறது. ஏழைகளின் இந்த வயிற்றெரிச்சல் நிச்சயம் தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடாது. எனவே நடைபெற உள்ள தேர்தலில் தி.மு.க. ஆட்சியை விரட்டுங்கள். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
முன்னதாக, ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் அருகே திறந்தவேனில் நின்ற படி விஜயகாந்த் பேசியதாவது:-
தமிழகத்தில் எமர்ஜென்சி நடக்கிறது என்று கருணாநிதி சொல்கிறார். அரசு அதிகாரிகள் சரியாக வேலை செய்வது தவறா?. அனைத்து மக்களும் நிம்மதியாக நட மாடுகிறார்கள். எல்லாமே சரியாக தான் நடக்கிறது. அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்தால் எமர்ஜென்சி என்கிறார். நான் பதவி எதுவும் கேட்கவில்லை. அது கேட்கும் போது பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் சென்றால் மட்டும் போலீஸ் பாதுகாப்பு வேண்டும். மற்றவர்களுக்கு பாதுகாப்பு வேண்டாமா?. அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும்.
2 ஏக்கர் நிலம் தருவதாக கூறி தரவில்லை. எல்லா விஷயத்தை பற்றியும் பேசுகிறார், ஆனால் விலைவாசி உயர்வை பற்றி மட்டும் பேசவில்லை. ஒருகிலோ அரிசி ரூ.1-க்கு கொடுத்தார். மற்ற பொருட்களின் விலை என்ன?. ஏன் வீட்டை கூட்டி பெருக்கும் விளக்குமாரு இன்று என்ன விலைக்கு விற்கிறது. முன்பு 50 பைசாவுக்கு விற்றது. நகரங்களில் ரூ.10-க்கு விற்கிறது.
பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்திக் கொடுங்கள் என்று கெஞ்சுகிறார்கள். அதனை செய்யாமல் இப்போது ஓட்டுபோடுங்கள் பருத்தி கொட்டை, புண்ணாக்கு தருகிறோம் என்று கூறுகிறார்கள். பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி, விற்பனை விலையை உயர்த்தாமல் இடைப்பட்ட விலையை அரசு ஏற்கவேண்டும். அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள்.
மக்களை ஏமாற்றும் உங்களை தெய்வம் விடாது. ஆட்சி மாறினால் காட்சிகள் மாறும். அதுவும் காவல்துறையில் காட்சிகள் உடனே மாறும். காவல்துறையினர் எப்போதும் மக்களின் நண்பனாக இருங்கள். நாகரிகம் தெரியாமல் பேசுகிறார்கள் என்கிறார்கள். உங்களைப்பற்றி கூறினால் பொத்துக்கொண்டு வருகிறது. நீங்களும் 10 பத்து மாதம் தான், நானும் 10 மாதம் தான்.
நான் யாரையும் அடிக்கவில்லை. ஆனால் கிராபிக்ஸ் வேலைகள் செய்து ஒளிபரப்புகிறார்கள். தேர்தல் அதிகாரியை அடித்ததை ஒளிபரப்ப வேண்டியது தானே. கருத்து கணிப்பையும் மக்களுக்கு டி.வி.யில் காண்பிக்கலாமே. ஏன் காட்டவில்லை.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
No comments:
Post a Comment