பெண் போலீஸ் ஒருவரை உயர் அதிகாரிகள் பாலியல் சித்தரவதை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு காவல் நிலையத்தில் பெண் போலீசாக இருப்பவர் மாலதி(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
நான் ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகின்றேன். நான் பணியாற்றி வரும் மாவட்டத்தில் உள்ள போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர் எனக்கு பல்வேறு விதமான செக்ஸ் தொல்லைகள் கொடுத்து வருகின்றனர். வெளியே சொல்ல முடியாத அளவுக்கு நான் பாலியல் சித்தரவதைகளுக்கு ஆளாகி உள்ளேன். நீதிபதிகள் கேட்டுக் கொண்டால் இதை தனியாக சொல்லத் தயாராக உள்ளேன்.
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் செக்ஸ் தொல்லை தொடர்பாக 1997-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில் பெண்கள் பணி புரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி விசாரிக்க 3 பேர் கொண்ட குழுக்களை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்த உத்தரவு வெளிவந்து 13 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாட்டில் பெண்கள் பணிபுரியும் காவல் நிலையங்களிலோ, போலீஸ் சரகத்திலோ, மாவட்ட போலீஸ் அலுவலகத்திலோ விசாரணைக் குழு இதுவரை அமைக்கப்படவில்லை.
எனவே, பெண் காவலர்களுக்கு நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து விசாரணை நடத்த உடனடியாக குழு அமைக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி இக்பால் தலைமையிலான பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இது பற்றி விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெண் போலீஸ் ஒருவரே பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருப்பது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment