ஓட்டு எண்ணிக்கை மையங்களில், முறைகேடு நடந்து விடாமல் கண்காணிக்க, தங்களது கட்சித் தொண்டர்களை அரசியல் கட்சிகள் களமிறக்கி உள்ளன. தமிழகத்தில் சட்டசபை தேர்தல், கடந்த 13ம் தேதியே முடிந்த போதிலும், ஓட்டு எண்ணிக்கை, மே 13ம் தேதி தான் நடக்கிறது. அதுவரை, ஓட்டு எண்ணிக்கை மையங்களில், அந்தந்த தொகுதிகளுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அந்தந்த மையங்களில், வேட்பாளர்களது ஏஜன்ட்கள் தங்கியிருந்து, கண்காணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மையங்களில் நான்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கும் மேல், தங்களது கண்காணிப்பை தீவிரப்படுத்த அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்காக, தங்களது கட்சித் தொண்டர்களை, ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே,கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளன.
குறிப்பாக, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., தொண்டர்கள், இரவு பகல் பாராது, ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு வெளியே தினமும் காத்திருக்கின்றனர். சென்னையில், லயோலா கல்லூரி, அண்ணா பல்கலை வளாகங்களில் ஓட்டு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் வெளியே, கட்சிக்காரர்கள் காவல் காத்து வருகின்றனர். ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக களத்தில் இறங்குவதற்கு தயார் நிலையில் இவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment