தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 4 மணி நிலவரப்படி 59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டசபைத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
பெரிய அளவிலான வன்முறைச் சம்பவங்கள், வெட்டுக் குத்து போன்றவை இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது தேர்தல்.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதான இடங்களில் மட்டும் கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டு அங்கு வாக்குப்பதிவு தொருகிறது. ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கத்தில் 65வது எண் வாக்குச்சாவடியும் இதில் ஒன்று.
பல வாக்குச் சாவடிகளில் ஏராளமான வாக்காளர்கள் காத்திருந்ததால் அவர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிற்பகல் 2 மணி நிலவரப்படி தமிழகத்தில் 44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார். 4 மணி நிலவரப்படி 59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாலை 5 மணிக்கு முன் வாக்குச் சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் தரப்பட்டது. அவர்கள் வாக்குப் பதிவு நேரம் முடிந்த பின்னரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் டோக்கன் வாங்கிய ஏராளமான வாக்காளர்கள் இன்னும் வாக்களித்து வருகின்றனர்.
2 மணி நிலவரப்படி தர்மபுரியில் அதிகபட்சமாக 56 சதவீத வாக்குகளும், காஞ்சிபுரத்தில் மிகக் குறைந்த அளவாக 36 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
முன்னதாக, மக்கள் காலையிலேயே வாக்குச் சாவடிகளில் குவிந்து ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். பல பகுதிகளில் காலை 7 மணிக்கே வாக்குச் சாவடிகளுக்கு மக்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தைக் காண முடிந்தது.
முதல் முறையாக வாக்களிக்க வருவோர், பெண்கள், மாணவர்கள் ஆகியோர் மத்தியில் பெரும் ஆர்வம் காணப்பட்டது.
காலையிலேயே வெயில் கடுமையாக அடித்து வருகின்ற போதிலும் அதைப் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் வாக்களித்தனர்.
பிற்பகல் 12 மணி நிலவரப்படி சென்னையில் கிட்டத்தட்ட 30சதவீத அளவிலும், நாகையில் 29 சதவீதம், காஞ்சிபுரத்தில் 40 சதவீதம், கன்னியாகுமரியில் 28 சதவீதம், ஈரோட்டில் 25 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மேட்டூர் தொகுதியில் 40 சதவீத வாக்குககள் பதிவாகியிருந்தன.
ஸ்ரீரங்கத்தில் 1 மணி வரை 45 சதவிதம் வாக்குப்பதிவு:
அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா போட்டியிடும் ஸ்ரீரங்கத்தில் பகல் 1 மணி வரை 42 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன
பலத்த பாதுகாப்பு டன் வாக்குப்பதிவு இயந்திரங்கள்:
வாக்குப் பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும்.
மே 13ம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கும். சில மணி நேரங்களில் முடிவுகள் வர ஆரம்பிக்கும். பிற்பகல் வாக்கில் யார் ஆட்சி அமைக்கப் போவது என்பது தெரிய வரும்.

No comments:
Post a Comment