ஜிஎஸ்எம் செல்போன் இணைப்புகளை வைத்திருப்போரில் தென் மாநிலங்களில் தமிழகத்திற்கு 3வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் ஆந்திராவும், 2வது இடத்தில் கர்நாடகாவும் உள்ளன. மேலும தமிழகத்தி்ல நான்கில் 3 பேரிடம் ஜிஎஸ்எம் இணைப்பு உள்ளதாம்.
கடந்த ஜூன் மாதத்தில் தென் மாநிலங்களிலேயே ஆந்திராவில் தான் அதிக அளவாக 6 லட்சத்து 8 ஆயிரத்து 233 புதிய ஜிஎஸ்எம் இணைப்புகளைப் பெற்றனர். அடுத்த இடத்தில் கர்நாடகா உள்ளது. தமிழகம் 3வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ஜூன் மாதத்தி்ல புதிதாக 2 லட்சத்து 67 ஆயிரத்து 285 இணைப்புகளைப் பெற்றனர்.
கடந்த ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் புதிதாக 46 லட்சத்து 36 ஆயிரத்து 371 ஜிஎஸ்எம் இணைப்புகள் பெறப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் மொத்தம் 67 கோடியே 73 லட்சத்து 53 ஆயிரத்து 977 ஜிஎஸ்எம் இணைப்புகள் உள்ளன.
தென் மாநிலங்களைப் பொறுத்தவரை அதிக அளவில் ஜிஎஸ்எம் செல்போன் சேவையைப் பயன்படுத்துவோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான். இங்கு நான்கில் 3 பேரிடம் ஜிஎஸ்எம் இணைப்புகள் உள்ளனவாம். ஆந்திராவில் 5 பேரில் 3 பேரிடம் இந்த இணைப்பு உள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில், ஜனவரி - மார்ச் காலாண்டில், தொலைபேசி வாடிக்கையாளர்கள் (செல்போன் மற்றும் லேண்ட்லைன்) எண்ணிக்கை 2.48 கோடி உயர்ந்து 95.13 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 2011 டிசம்பர் மாத இறுதியில் 92.65 கோடியாக இருந்தது. இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வாயிலாக இது தெரிய வந்துள்ளது.
மார்ச் காலாண்டில் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டீ.எம்.ஏ. செல்போன் சேவையில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2.53 கோடி அதிகரித்து 91.92 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் சுனில் மிட்டல் தலைமையின் கீழ் செயல்படும் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 18.46 கோடியாக உள்ளது. அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதில் இந்நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அதேசமயம், மார்ச் காலாண்டில் புதிதாக அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளதில் ஐடியா செல்லுலார் (63.40 லட்சம் பேர்) நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக 61.30 லட்சம் வாடிக்கையாளர்களை ஈர்த்து யூனிநார் நிறுவனம் இரண்டாவது இடத்திலும், 55.80 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்று பார்தி ஏர்டெல் நிறுவனம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
வோடாஃபோன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 14.77 கோடியிலிருந்து 15.05 கோடியாக உயர்ந்துள்ளது.
மார்ச் காலாண்டில், பொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை முறையே 12.20 லட்சம் மற்றும் 1.60 லட்சம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, மார்ச் மாத இறுதியில் இந்நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை முறையே 13 கோடி மற்றும் 92.90 லட்சமாக உயர்ந்துள்ளது.
மார்ச் காலாண்டில் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை டிசம்பர் காலாண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ள நிலையில், லேண்ட்லைன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 5.20 லட்சம் குறைந்து 3.22 கோடியாக குறைந்துள்ளது.
2011 டிசம்பர் மாத இறுதியில் நகரங்களில் தொலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 61.12 கோடியாக இருந்தது. இது, 2012 மார்ச் மாத இறுதியில் 62.05 கோடியாக உயர்ந்துள்ளது. நகரங்களில் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 167.85 சதவீதத்திலிருந்து 169.55 சதவீதமாக உயர்ந்துள்ளது. சில வாடிக்கையாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட செல்போன் இணைப்புகளை பெற்றுள்ளதால் இந்த விகிதம் அதிகமாக உள்ளது.
மார்ச் காலாண்டில் கிராமங்களில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.55 கோடி உயர்ந்து 33.08 கோடியாக அதிகரித்துள்ளது. கிராமங்களில் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 37.48 சதவீதத்திலிருந்து 39.22 சதவீதமாக உயர்ந்துள்ளது. நகரங்களுடன் ஒப்பிடும்போது கிராமங்களில் தொலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
2011 டிசம்பர் மாத இறுதியில் இணையதள இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2.24 கோடியாக இருந்தது. இது, மார்ச் மாத இறுதியில் 2.29 கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் அகண்ட அலைவரிசை இணைப்பை பெற்ற வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 1.34 கோடியிலிருந்து 1.38 கோடியாக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment