''நான் அவள் இல்லை'' பாணியில் சென்னையில் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம் பறித்திருக்கிறார் ஒரு பெண். கேரளாவை சேர்ந்த அப் பெண்ணை பிடிக்க போலீசார் வலைவிரித்துள்ளனர். அவரை பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகிறது. சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சரவணன் (33) என்பவரிடம் சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கேசவபுரத்தை சேர்ந்த இளம் பெண் சஹானாஸ் (30) என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டார். செல்போன் சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறினார். அவரது பேச்சில் சரவணன் மயங்கினார். வக்கீலுக்கு படித்து வருவதாகவும் அதற்கு பணம் தேவைப்படுகிறது என்றும் கூறி சரவணனிடம் அப்பெண் ரூ.50 ஆயிரம் அபேஸ் செய்தார். பின்னர், தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவானார்.
அடையாறு செல்போன் கடையில் வேலை செய்யும் மற்றொரு சரவணன் (28) என்பவரிடமும் இதே பாணியில் சஹானாஸ் செல்போனில் தொடர்பு கொண்டு அறிமுகமானார். காதலிப்பதாக அவர் கூறிய ஆசை வார்த்தைகளை சரவணன் நம்பினார். ‘என் தோழி திருமணத்துக்கு செல்ல வேண் டும். அணிந்து செல்ல நகை எதுவும் இல்லையே’ என்று புலம்பி உள்ளார். பரிதாபப்பட்ட சரவணன், ஒன்றரை பவுன் நகை வாங்கி கொடுத்துள்ளார்.
நகையை பெற்று சென்ற சஹானாஸ் பின் தொடர்புகொள்ளவே இல்லை. இதேபோன்று அனாதை குழந்தைகளுக்கு துணி வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று கூறி தி.நகர் பிளாட்பாரத்தில் கடை வைத்திருக்கும் ராஜா என்பவரிடமும் அப் பெண் பணம், நகையை அபேஸ் செய்து ஓட்டம் பிடித்தார். இது குறித்து சரவணன், மற்றொரு சரவணன், ராஜா ஆகிய 3 பேரும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார். விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 இளைஞர்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து தன்னை சஹானாஸ் திருமணம் செய்து மோசடி செய்து விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறினர்.
போரூர் முகலிவாக்கம் எஸ்எஸ் கோயில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (25) கூறியதாவது: டிப்ளமோ முடித்துள்ளேன். தனியார் பைக் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தபோது சஹானாஸுடன் தொடர்பு ஏற்பட்டது. தினமும் என் செல்போனில் பேசி மயக்கினார். அவரது வலையில் விழுந்து, கடந்த ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி எனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சஹானா ஸை திருமணம் செய்தேன்.
ஐஏஎஸ் படிக்க பணம் வேண்டும் என்றும் தொடர்ந்து வற்புறுத்த ஆரம்பித்தார். இதை தட்ட முடியாமல் ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் வரை செலவு செய்தேன். தற்போது, அவர் என்னை ஏமாற்றியதை தெரிந்து கொண்டேன். இப்போது, சஹானாஸ் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. என்னை திருமணம் செய்து மோசடி செய்த சஹானாஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னா (28) என்பவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்து கூறுகையில்,கால்பந்து விளை யாட்டு வீரரான என்னை சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்த சஹானாஸ் என்பவர் காதலிப்பதாக கூறினார். இதை நம்பி அவர் விருப்பப்படி நடந்து கொண்டேன். வீட்டின் எதிர்ப்பை மீறி கடந்த மார்ச் மாதம் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் ஒன்றில் திருமணமும் செய்து கொண்டோம்.
ஆனால், அவர் தற்போது என்னை போன்று பல வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண் டது தெரிந்து அவர் மீது புகார் அளிக்க வந்துள் ளேன். இப்போது, சஹானாஸ் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறுகிறார். ஆனால், அதில், உண்மை இல்லை என்றார். இந்த புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
மருமகள் ஒன்று மாமியார் 2
புளியந்தோப்பை சேர்ந்த பிரசன்னா என்பவரை திருமணம் செய்த சஹானாஸ் அதே தெருவில் உள்ள இன்னொரு வாலிபரையும் திருமணம் செய்து மோசடி செய்துள்ளார். ஒரு முறை அந்த பெண்ணை பார்த்து 2 வாலிபர்களின் பெற்றோரும் சஹானாஸ் தனது மருமகள் என்று சண்டை போட்டுள்ளனர். பின்னர்தான் விவரம் தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வேப்பேரியை சேர்ந்த சம்சுதீன், திருவள்ளூர் ராஜேஸ், அடையாறு சீனிவாசன், கோவை சரவணன், திருச்சி ராகுல், அம்பத்தூர் சந்திரபாபு, புளியந்தோப்பு பிரசன்னா, திருவொற்றியூர் சரவணன், அடையாறை சேர்ந்த மற்றொரு சரவணன், தி.நகர் ராஜா என்று இவரிடம் ஏமாந்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இன்னும் பலர் புகார் அளிக்காமல் உள்ளனர்.
பல வழிகளில் பணம் சுரண்டல்
திருமணம் ஆன சில நாட்களில் தனிக்குடித்தனம் செல்லும்படி சஹானாஸ் தலையணை மந்திரத்தை பயன்படுத்துவார். பின்னர், அவரது விருப்பம் நிறைவேறும். கணவன் வீட்டு சொந்த பந்தங்களுடன் உள்ள உறவு முறிந்த உடன் தனது செல்வாக்கை கணவனிடம் நிலை நிறுத்துவார். தொடர்ந்து தான் ஐஏஎஸ் படிக்க வேண்டும், வக்கீலுக்கு படிக்க வேண்டும். அதற்கு பணம் வேண்டும் என்று கணவனிடம் கேட்பார்.
அவர்களும் தங்களிடம் இருக்கும் நகை, பணம், வீட்டை அடமானம் வைத்து சஹானாஸ் கேட்ட பணத்தை கொடுப்பார்கள். தனியாக இருந்து சிறப்பாக படிப்பதற்காக தங்கும் விடுதியையும் ஏற்பாடு செய்து கொடுப்பார்கள். ஆனால், சஹானாஸ் அங்கு தங்குவது போல் பாவனை செய்து அடுத்த வாலிபர்களுக்கு வலை விரிக்க தொடங்கி விடுவார் என்று பாதிக்கப்பட்ட வாலிபர்கள் தாங்கள் ஏமாந்த கதையை கண்ணீருடன் கூறியுள்ளனர்.
மோசடி செய்தது எப்படி?
திருமண மோசடி செய்யும் சஹானாஸ் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கேரளாவை சேர்ந்த சஹானாஸுக்கு பெற்றோர் இல்லை. இவரை அதே மாநிலத்தை சேர்ந்த சித்தீஸ் என்பவர் காதல் திருமணம் செய்து கொண்டார். ஒரு குழந்தை உள்ளது. திருமணமான சில ஆண்டுகளில் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கணவன், குழந்தைகளை பிரிந்து தனியாக சென்று விட்டார் சஹானாஸ்.பின்னர், திருச்சூரை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலிப்பது போன்று ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பணத்தை அபேஸ் செய்து பிரிந்து விட்டார். தொடர்ந்து கேரளாவில் 5க்கும் மேற்பட்ட வாலிபர்களை ஏமாற்றி பணம், நகைகளை சுருட்டி உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டார்.
இதை தொடர்ந்து சென்னைக்கு வந்தார். கையில் எப்போதும் ஒரு வாலிபரின் பாஸ்போர்ட் சைஸ் படம் வைத்திருப்பார். ÔÔஇந்த படத்தில் இருப்பவர் என் தோழியை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார். இவரை பற்றிய தகவல் தெரியுமாÕÕ என கண்ணில் தென்படும் இளைஞர்களிடம் விசாரிப்பார். பின்னர் அவர்களுக்கு தன் செல்போன் நம்பரை கொடுப்பார். சில நாட்கள் கழித்து அந்த வாலிபர்களிடம் தொடர்புகொண்டு பேசுவார். அவரது சாதுர்யமான பேச்சில் இளைஞர்கள் மயங்கி விடுவார்கள். அப்படி மயங்கும் ஆண்களை திருமணம் செய்து, அவர்களுடன் சில நாள் குடும்பம் நடத்தி பணம், நகையை சுருட்டி மாயமாகி விடுவார். சென்னையில் மட்டும் மணி கண்டன் உட்பட 50க்கும் மேற்பட்ட இளைஞர்களை சஹானாஸ் திருமணம் செய்து மோசடி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.
திருமணத்தை பதிவு செய்யும்படி மாப்பிள்ளை வீட்டில் இருந்து வற்புறுத்தினால், கல்வி சான்று, சாதி சான்று உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் சொந்த ஊரில் உள்ளது. தற்போது எதுவும் இல்லை என்று சமாளித்து விடுவார். இதனால், திருமணத்தை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எப்போதும் செல்போனிலேயே பேசிக் கொண்டு இருப்பாராம். இதுகுறித்து கேட்கும் கணவனிடம் “நான் யாரிடம் வேண்டுமானாலும் பேசுவேன். அதை பற்றி கேட்கக்கூடாது. அதே போன்று நீ யாரிடம் பேசினாலும் நான் கண்டுகொள்ள மாட்டேன்'' என்று பதில் அளிப்பாராம். தொடர்ந்து கிடுக்குப்பிடி கேள்வி கேட்டால் கத்தியால் கையை கீறிக் கொள்வேன், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுவாராம்.



பெண்களை குறை சொல்லாதீங்கப்பா பொம்பளைங்க அமைப்பு கோவிச்சுக போகுது...அவளுங்க நம்ம சகோதரிங்கப்பா....அர கொறையா போனாலும் நாமதான் கண்ண மூடிகிட்டு போகணும்
ReplyDelete