இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்சில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 டெஸ்ட் கொண்ட தொடரை 20 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்கா வென்றது. 5 விக்கெட் வீழ்த்திய பிலாந்தர் ஆட்டநாயகன் விருது பெற் றார். தொடர் நாயகன் விருது தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, இங்கிலாந்தின் பிரையருக்கு வழங்கப்பட்டது. இந்த வெற்றியால் தென் ஆப்ரிக்க அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசை யில் இங்கிலாந்து அணியிடம் இருந்து நம்பர்ஒன் இடத்தை தட்டிப்பறித்தது.
தற்போது தென் ஆப்ரிக்கா 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து 117 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது. தரவரிசை பட்டியலில் தென் ஆப்ரிக்கா முதலிடத்தை பிடிப்பது இது 2வது முறையாகும். இதற்கு முன்னர் 2003ம் ஆண்டில் இருந்து 2009 வரை மொத்தம் 74 மாதங்கள் டெஸ்ட் போட்டியில் நம்பர்ஒன் இடத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்திருந்தது.
அதன்பிறகு இந்திய அணி சிறப்பாக ஆடி 2009 டிசம்பரில் தென் ஆப்ரிக்காவிடம் இருந்து நம்பர்ஒன் இடத்தை தட்டி சென்றது. போராடி கைப்பற்றிய நம்பர்ஒன் இடத்தை இந்திய அணி தக்கவைத்து கொள்ள பாடுபடவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய அணியிடம் இருந்து நம்பர்ஒன் இடத்தை இங்கிலாந்து அணி கைப்பற்றியது. சுமார் ஓராண்டுக்கு பின்னர் இங்கிலாந்து அந்த இடத்தை தற்போது இழந்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் இங்கிலாந்து அணி 12 டெஸ்ட் போட்டியில் ஆடி 4ல் மட்டுமே ஜெயித்துள்ளது. 6 ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. 2 போட்டியை டிரா செய்தது.

No comments:
Post a Comment