ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை எனப்படும் மினி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி(50 ஓவர்) 1998ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதன்படி 7வது மினி உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு (2013) ஜூன் 6ந்தேதி முதல் 23ந்தேதி வரை நடைபெறுகிறது.
குட்டி அணிகள் இல்லாமல், தரவரிசையில் டாப் 8 இடங்களை வகிக்கும் முன்னணி அணிகள் மட்டுமே இந்த போட்டியில் களம் இறங்குவதால் மோதல் கடுமையாக இருக்கும். ஒவ்வொரு அணிகளும் இந்த கோப்பையை வெல்லும் திறனுடன் இருப்பதாக நினைக்கும் என்பது தான் இந்த போட்டியின் சிறப்பம்சம் என்று போட்டி அமைப்பு குழு இயக்குனர் ஸ்டீவ் எல்வொர்த்தி குறிப்பிட்டார்.
இந்த போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை ஆகிய அணிகளும், பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
ஜூன் 6ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து இந்திய அணி ஜூன் 11ந்தேதி வெஸ்ட் இண்டீசையும், ஜூன் 15ந்தேதி பரம போட்டியாளரான பாகிஸ்தானையும் சந்திக்கிறது.
கார்டிப், எட்ஜ்பஸ்டன், லண்டன் ஓவல் ஆகிய மூன்று மைதானங்களில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. மினி உலக கோப்பை போட்டி நடத்தப்படுவது இதுவே கடைசி முறையாகும். இதன் பிறகு மினி உலக கோப்பை போட்டி நடத்தப்படாது என்றும், அதற்கு பதிலாக புதிதாக ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்படும் என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஏற்கனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment