
விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, மக்களுக்காக மக்கள் பணி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருப்பூரில் நேற்று நடந்தது.
இதில் விஜயகாந்த் பங்கேற்றுப் பேசினார். அவர், ‘’ தமிழக மீனவர்கள், 20 ஆண்டுகளாக பாதித்து வருகின்றனர். அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும் கடிதம் எழுதுவதோடு நின்று விடுகின்றன; தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனைத்து கட்சிகளும் இணைந்து, மத்திய அரசிடம் பேச, எந்த கட்சி தலைமை ஏற்றாலும், தே.மு.தி.க., பின்னால் வரும். அவிநாசி - அத்திக்கடவு திட்டம், 1990ம் ஆண்டு முதல் வாக்குறுதியாக கொடுக்கப்படுகிறது.
இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கான திட்ட நிதி ஒதுக்கீடு அனைத்தும், லஞ்சமாக ஆட்சியாளர்களுக்கு செல்கிறது. இரு கட்சிகளும் பேசி வைத்துக்கொண்டு, மணல் கடத்தல், கிரானைட் கடத்தல் என, நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்து வருகின்றன. நான், எனது அரசு என முதல்வர் கூறுகிறார்.
இந்த ஆணவம் அழிவைத் தரும் என, அவர் தலைவரே பாடியுள்ளார் என்பதை மறந்து விடக்கூடாது. "டாஸ்மாக்' மது மூலம் சரக்கு விற்பனை உயர்த்துவதை லட்சியமாக கொண்டு, மக்களை குடிகாரர்களாக மாற்றியுள்ளனர். மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தவும், தொழில் செய்யவும் இலவசங்கள் வழங்க வேண்டும்.
அரசில், அமைச்சர்களும், அதிகாரிகளும் தினமும் மாறி வருகின்றனர். அனைத்திலும் ஊழல் மலிந்து விட்டது. வளர்ச்சி திட்டங்களில் கமிஷன் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. எங்கும், எதிலும் ஊழல் மயமாகியுள்ளது’’என்று பேசினார்.
No comments:
Post a Comment