அமெரிக்காவுக்கு முதல் ஒலிம்பிக் ஜூடோ தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார் கைலா ஹாரிசன். ஆனால் இவரது வெற்றிக்குப் பின்னால் பெரும் சோகக் கதை உள்ளது.
ஒலிம்பிக்கில் அமெரிக்கா எத்தனையோ சாதனைகளைப் படைத்துள்ளது. ஆனால் ஜூடோவில் ஒருமுறை கூட பதக்கம் வென்றில்லை. ஆனால் முதல் முறையாக தங்கப் பதகக்கத்தை அது தற்போது லண்டனில் தட்டிப் பறித்துள்ளது. இந்தசாதனையைச் செய்துள்ளார் 22 வயதான அமெரிக்க வீராங்கனை கைலா ஹாரிசன்.
ஆனால் கைலாவின் கதை பெரும் சோகக் கதையாகும். இவரது ஆரம்ப கால பயிற்சியாளரிடம் சிக்கி பல காலத்திற்கு பாலியல் சித்திரவதைக்குள்ளானவர் கைலா என்பது அதிர்ச்சிக்குரிய ஒன்று.
கைலா சிறுமியாக இருந்தபோது அந்தப் பயிற்சியாளர், கைலாவை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தி வந்தார். அந்தத் துயரத்திலிருந்தும், வேதனையிலிருந்தும் மீண்டு கடும் பயிற்சி பெற்று வந்த கைலா தற்போது தங்கம் வென்று தனது துயரத்தையும், அமெரிக்காவின் பதக்க ஏக்கத்தையும் ஒரு சேரத் துடைத்துள்ளார்.
இறுதிப் போட்டியில், இங்கிலாந்து வீராங்கனை ஜெம்மா ஜிப்பன்ஸை திணறடித்து வெற்றி பெற்றார் கைலா.
கைலா சிறுமியாக இருந்தபோது ஓஹையோவில் உள்ள ஜூடோ பள்ளியில் பயிற்சி பெற்றார். அப்போது அங்கு பயிற்சியாளராக இருந்தவர் டேணியல் டோயல். இவர் 14 வயது சிறுமியாக இருந்த கைலாவை, அவரது 16வது வயது வரை பாலியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தி வந்தார். கைலாவை விட 16 வயது மூத்தவர் அந்தப் பயிற்சியாளர். கைலாவின் குடும்பத்தோடு நெருக்கமாக பழக்கம் வைத்துக் கொண்டு அதைப் பயன்படுத்தி கைலாவை தவறாகப் பயன்படுத்தி வந்தார்.
கைலாவைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து அவருடன் உறவு கொண்டு வந்தார். ஒருமுறை இருவருக்கும் இடையிலான உறவை வீடியோவிலும் ரகசியமாக பதிவு செய்தார். டோயலின் நோக்கம் தவறானதாக இருப்பதை உணர்ந்த கைலா தனது ஜூடோ தோழி ஒருவரிடம் இதுகுறித்துக் கூற அவர் அதை கைலாவின் தாயாரிடம் சொல்ல விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.
தனது பயிற்சியாளரின் லீலைகளை கடந்த 2007ம் ஆண்டு அம்பலப்படுத்திய கைலா பின்னர் வழக்கும் தொடர்ந்தார். இதையடுத்து டோயல் கைது செய்யப்பட்டு தற்போது 10 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
தற்போது தங்கப் பதக்கத்தை வென்றுள்ள கைலா, இதுகுறித்து கண்ணீருடன் கூறுகையில், எனது நோக்கம், லட்சியம் நிறைவேறி விட்டது. நான் தோல்வி அடையவில்லை. வாழ்க்கையிலும் வென்றுள்ளேன் என்றார்.
No comments:
Post a Comment