சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற இந்திய வீரர் லட்சுமணுக்கு எதிராக, தான் வீசிய 'தூஸ்ரா' வகையை பந்துகளை கூட அவர் சிறப்பாக ஆடியதாக முன்னாள் இலங்கை சுழல்பந்துவீச்சாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் லட்சுமண்(37). பொறுமையாக ஆடும் தன்மை கொண்ட லட்சுமண், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்தவர். இந்த நிலையில் வரும் 23ம் தேதி துவங்க உள்ள நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட லட்சுமண், திடீரென சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள லட்சுமண் குறித்து, பல நாட்டு கிரிக்கெட் வீரர்களும் தங்களின் அனுபவங்களை தெரிவித்து வருகின்றனர். இலங்கை அணியின் முன்னாள் சுழல்பந்துவீச்சாளரான முரளிதரன், தூஸ்ரா என்ற பந்துவீச்சுக்கு பெயர் பெற்றவர். ஆனால் அவரது தூஸ்ரா வகையை சேர்ந்த பந்துகளை கூட, லட்சுமண் சிறப்பாக ஆடியதாக முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து லட்சுமண் ஓய்வு அறிவித்ததை அறிந்து வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன். நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவார் என்று நம்பினேன். ஆனால் அதற்கு முன்னதாகவே ஓய்வை அறிவித்துள்ளார். அவரது முடிவை நான் மதிக்கிறேன்.
இந்திய கிரிக்கெட் வீரர்களில் லட்சுமண் ஒரு சிறந்த வீரர். எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பல சிறந்த
பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசி உள்ளேன். ஆனால் எனது பந்துவீச்சில் லட்சுமண் அதிக முறை அவுட்டாக்க முடியவில்லை. லட்சுமணுக்கு எதிராக பந்துவீசுவதை கடினமாக உணர்ந்துள்ளேன். முன்னாள் ஆஸ்திரேலிய சுழல்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே கூட லட்சுமணுக்கு பந்துவீச திணறி உள்ளார்.
சுழல்பந்துவீச்சுக்கு எதிராக லட்சுமண் சிறப்பாக விளையாட கூடியவர். அவர் ஆடுகளத்தில் வந்த உடனேயே அவரை அவுட்டாகி விட வேண்டும். ஆடுகளத்தில் அவர் நிலைத்துவிட்டால், எந்த மாதிரியாக பந்தை வீசினாலும், அவரை அவுட்டாக முடியாது. தூஸ்ரா உட்பட பல வகையான பந்துகளையும் லட்சுமண் சிறப்பாக ஆடி விடுவார்.
நான் வீச போகும் பந்துகளை முன்னதாகவே யூகித்துவிடும் திறன் கொண்ட லட்சுமண், சிறப்பாக ஆடுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டங்களை நான் ரசித்து பார்த்துள்ளேன்.
லட்சுமண் பேட்டிங் செய்யும் போது அவரது மணிக்கட்டுகள் சிறப்பாக செயல்படுகின்றன. இதனால் ஆடுகளத்தில் எங்கு பிட்ச் செய்து பந்து வீசினாலும் அவர் அதை ஆடிவிடுவார். அதேபோல நான் பந்துவீசிய பிறகு, திடீரென பின்புறமாக சென்று பந்தை அடித்து ஆடும் திறன் கொண்டவர்.
கடந்த 2005ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா பேட்ஸ்மேன்களான சச்சின், யுவராஜ், டோணி ஆகியோரை அவுட்டாக்கி, 200 ரன்களுக்குள் இந்தியாவை சுருட்டி விட முடிவு செய்தோம். ஆனால் 6 விக்கெட்களை இழந்த இந்திய அணியை லட்சுமண் சதமடித்து மீட்டதை மறக்க முடியாது.
லட்சுமண் உடன் பல ஆண்டுகளாக நட்பு கொண்டுள்ளேன். மெதுவாக பேசும் தன்மை கொண்ட லட்சுமண் உடன் நேரம் செலவிட விரும்பி உள்ளேன். என்னை பொறுத்த வரை லட்சுமன் இன்னும் சில ஆண்டுகளுக்கு விளையாடி இருக்கலாம். ஆனால் ஓய்வு முடிவு என்பது அவரது தனிப்பட்ட முடிவு. அதில் நான் தலையிட விரும்பவில்லை என்றார்.

No comments:
Post a Comment