முருகன்,சாந்தன்,பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யகோரி உயிர்விட்ட செங்கொடியின் தியாகத்தையும், முத்துக்குமாரின் தியாகத்தையும் எண்ணி மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று நடிகர் சத்தியராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.
மரண தண்டனைக்கு எதிரான 'இப்படிக்கு தோழர்.செங்கொடி' என்ற ஆவண பட வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிறன்று நடைபெற்றது. தமிழ் தேசிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் ஆவணப்படத்தின் சிடியை திரைப்பட நடிகர் சத்யராஜ் வெளியிட, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அதனை பெற்றுக்கொண்டார். விழாவில் சத்யராஜ் பேசியதாவது:
இது ஒரு நடிகருக்காக கூடிய கூட்டமல்ல முத்துக்குமாரின் தியாகத்தை புரிந்துகொண்ட கூட்டம். செங்கொடியின் தியாயத்தை புரிந்து கொண்ட கூட்டம். மாவீரன் பிரபாகரனின் தியாகத்தை புரிந்துகொண்ட கூட்டம். இந்த படத்தில் சினிமா என்பதையும் தாண்டி செங்கொடியின் தியாகம் மட்டும்தான் தெரிகிறது. அதனால்தான் எனக்கு சினிமாவுக்குள் இருக்கிற எனக்கு எதுவும் தெரியவில்லை. சினிமாவுக்கு வெளியே இருக்கிற மணியரசன் அவர்களுக்கு தெரிகிறது. அதுதான் இந்தப் படத்தினுடைய வெற்றி.
இப்படிக்கு செங்கொடி ஒரு அற்புதமான படம். இருளர் சமுதாயத்தின் அவலத்தை அழகாக இயக்குநர் சொல்லியிருக்கிறார். இருளர் சமுதாயத்தின் அவலத்தை சொல்வதற்காகவே தனியாக ஒரு படம் எடுக்கலாம். இருப்பினும், செங்கொடி என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு இருளர் சமுதாயத்தின் அவலம், ஈழவிடுதலைக்கு ஆதரவு, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதையும் ஆழமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன்.
முத்துக்குமார், செங்கொடி தியாகத்திற்கு நாம் எல்லோரும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். நாம் எல்லோரும் குற்றவாளிகள்தான். தீக்குளிக்க ஏன் அவர்கள் ஆளானார்கள் என்றால் மிகப்பெரிய எழுச்சி தமிழத்தில் உருவாகவில்லை என்பதுதான் உண்மை.
ஈழப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது லண்டனில் இரண்டரை லட்சம் பேர் ஊர்வலம் போனார்கள். பல லட்சம் பேர் உள்ள தமிழகத்தில் அதுபோல் ஏன் நடத்தமுடியவில்லை. முத்துக்குமார், செங்கொடி தியாகத்துக்காவது பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது தண்டனையை ரத்து செய்யப்பட வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய மகிழ்ச்சியான நாள் எதுவென்றால் அந்த மூன்று பேரும் விடுதலை ஆன நாளாகத்தான் இருக்கும் . இவ்வாறு நடிகர் சத்யராஜ் பேசினார்.

No comments:
Post a Comment