ரூ.81 லட்சம் கல்வி உதவித்தொகை மோசடியில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு என பகீர் தகவல் வெளியாகி உள்ளது. கழிப்பிடம் சுத்தம் செய்தல், தோல் பதனிடுதல் போன்ற சுகாதாரக்குறைவான வேலைகளை செய்பவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை அரசு வழங்குகிறது.நாமக்கல் மாவட்டத் தில் கடந்த 2010, 2011ம் ஆண்டுக்கான இந்த கல்வி உதவித்தொகையில் ரூ. 81 லட்சம் மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 50 பெண்கள் உள்பட 77 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கல்வி உதவித்தொகை மோசடியில் வெள்ளாளப்பட்டி பழனிசாமி, வெள்ளக்கல்பட்டி மணி ஆகிய இரு புரோக்கர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
புரோக்கர் மணி கடந்த வாரம் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தார். இவரை புதுச்சத்திரம் போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். புரோக்கர் மணி பல்வேறு திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறியது: வெள்ளாளப்பட்டி பழனிசாமி தான் இதில் மெயின் புரோக்கராக செயல்பட்டுள்ளார். கல்வி உதவித்தொகையை பள்ளி தலைமை ஆசிரியரின் பெயரில் செக்போட்டு கொடுத்துவிட்டு, ஒரு குழந்தைக்கு ரூ. 600 முதல் ரூ.800 வரை புரோக்கர்கள் ஹெச்.எம்.களிடம் கமிஷனாக வாங்கியுள்ளனர். இந்த பணம் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர், அங்கு பணியாற்றும் கண்காணிப்பாளர், உதவியாளர் என பலருக்கும் போய் சேர்ந்துள்ளது.

No comments:
Post a Comment