காங்கிரஸ் கட்சியில் இருந்து 19 பேரை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு நீக்கியதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள கே.எஸ்.அழகிரி எம்.பி., அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கே.எஸ்.அழகிரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
19 பேரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கியிருப்பது வருத்தம் அளிக்கிறது. வாய்ப்பு கிடைக்காதவர்கள் வருத்தப்படுவதும், சில நேரங்களில் எல்லை மீறிப் போவதும் வழக்கமான ஒன்றுதான். அவர்களை கண்டிக்க வேண்டுமே தவிர தண்டிக்கக் கூடாது. தண்டிப்பது என்று வந்துவிட்டால் பலரையும் தண்டிக்க வேண்டியது வரும்.
கட்சியின் மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். கட்சித் தலைவர் சோனியா காந்தி அமைத்த ஐவர் குழு இருக்கிறது. இவர்களுடன் கலந்து பேசி எல்லை மீறிய தோழர்களிடம் விசாரணை நடத்தி இருந்தால், கட்சியின் மதிப்பு உயர்ந்து இருக்கும்.
நீக்கப்பட்டவர்கள் கட்சியில் நீண்டகாலமாக இருப்பவர்கள். கட்சியோடு பிணைந்து இருப்பவர்கள். அவர்கள் மீதான நடவடிக்கையை விலக்கிக் கொள்ள வேண்டும். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கட்சித் தலைவர்களுக்கும் இப் பிரச்சினை சென்று இருப்பதால், அவர்களையும் கலந்து ஆலோசித்து, உடனடியாக சுமுகமாக, பரந்த மனதோடு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் முயற்சி எடுத்துத் தீர்வு காண வேண்டும் என்று அழகிரி கேட்டுகொண்டுள்ளார்.

No comments:
Post a Comment